புதன், 2 ஜூலை, 2025

அஜித்குமார் வழக்கு... ‘குடிமகனைக் கொலை செய்தலும் குடிமகளை வன்புணர்தலும்’!!!

//"அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை// என்பது ‘பிபிசி’ செய்தி.


நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ள இந்த வழக்கு குறித்துப் பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளதால், அதை மீண்டும் இங்கு விரித்துரைப்பது தேவையற்றதாகும்.

இந்த வழக்கைப் பொருத்தவரை, அஜித்குமார் என்னும் விசாரணைக் கைதி அடித்துக் கொல்லப்பட்டதை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது.

எனினும், வழக்கு ‘சிபிஐ’ என்னும் மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை முடிவடைந்த பின்னரே அஜீத்குமார் கொல்லப்பட்டது குறித்த முழு உண்மையும் வெளியாகும். அது நீதியரசர்களுக்கும் தெரியவரும்.

இந்நிலையில், நீதிபதிகள் புலனாய்வுத் துறையின் அறிக்கையைப் பெற்றுச் சட்ட விதிகளின்படி வழக்கை ஆராய்ந்த பின்னரே, யாரெல்லாம் உண்மைக் குற்றவாளிகள் என்பது தெரியவரும்.

புலனாய்வுத் துறையின் அறிக்கையைப் பெறாமலும், விசாரணையை நிறைவு செய்யாமலும் “அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது” என்று அவர்கள் கூறியிருப்பது எவ்வகையில் நியாயமானது என்பது புரியவில்லை.

தமிழ்நாடு என்னும் பெரியதொரு மாநிலத்தில் அன்றாடம் குற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன(அரசு நிர்வாகத்தில் காவல் துறைக்கு முக்கியப் பங்குண்டு என்றாலும், அதில் சிலர் குற்றம் செய்தால் அரசாங்கமே அதைச் செய்ததாக ஆகிவிடாது. அவர்களை அரசு தண்டிக்கலாம். அதன் பிறகு அத்துறையில் குற்றமே நிகழாது என்பதில்லை). ஸ்டாலின் மட்டுமல்லாமல் வேறு எவரொருவர் முதல்வராக இருந்தாலும், கூடக் குறைய குற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

இடம்பெறுகிற ஒவ்வொரு குற்றத்தையும் இந்த அரசே செய்ததாகச் சொல்வது முறையல்ல.

ஒரு கொலைக் குற்றத்தை[“அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது”] தமிழ்நாடு அரசே செய்ததாகச் சொல்லலாம் என்றால்.....

பெண்ணொருத்தியை ஒருவன் கடத்திச் சென்று வன்புணர்வு செய்து கொன்றால், அவன் செய்த அந்தக் குற்றத்தை அரசே செய்ததாக[“அரசே தன் குடிமகளை வன்புணவு செய்து கொன்றது”]ச் சொல்லலாம்தானே?

நீதியரசர்களும் மனிதர்களே. அவர்கள் உணர்ச்சிவசப்படுதலும் இயல்பே.

ஆனால், சட்ட விதிகளை நன்கு அறிந்திருக்கும் அவர்கள் அதன் அடிப்படையில் குற்ற வழக்கு குறித்து அறிக்கை தரலாமே தவிர, உணர்ச்சி வசப்பட்டுப் பேசுதல் கூடாது என்பது என் எண்ணம்.

நீதியரசர்களின் கடமை ‘நீதி’ வழங்குவது; அரசியல்வாதிகள்போல் விரும்பத்தகாத வகையில் அறிக்கை விடுவதல்ல!
* * * * *