‘கிளுகிளு’ பருவக் குமரிகள் குறித்த காதல் கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இது சாவோடு ‘சடுகுடு’ விளையாடிக்கொண்டிருந்த ஒரு கிராமத்துக் கிழவியின் கதை. வாசிப்போர் எண்ணிக்கை ஒரு 100 தேறுமா?!
சேலம்- கோவை நெடுஞ் சாலையில், சங்ககிரியை அடுத்த ஆறாவது கிலோ மீட்டரில், பல்லக்காபாளையம் செல்லும் ஊராட்சிப் பாதை கிளைவிடும் இடம். சாலையின் விளிம்பில், முகம் வைத்து நீண்டு கிடக்கும் பனை ஓலை வேய்ந்த அந்தத் தேனீர்க் கடை நல்லப்பனுடையது.
கடையை ஒட்டி, வரிசையில் குந்தியிருந்த ஐந்தாறு குடிசைகளுக்கும் சேர்த்துக் குடை பிடித்துக்கொண்டிருந்தது ஒரு பெரிய ஆலமரம்.
அதன் நிழலில், தன்னைப் போலவே காலாவதி ஆகிப்போன ஒரு கயிற்றுக் கட்டிலில் சிறு பிள்ளையைப் போல முடங்கிக் கிடந்தாள் அத்தாயி. கிழவிக்கு அன்று உடம்பு சுகமில்லை.
பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்த ஆடு மேய்க்கும் சிறுமிகளில் ஒருத்தி, “ஆயா...ஒம் மருமூவ கூப்புடுது” என்றாள்.
சோறு உண்ணத்தான் மருமகள் அழைக்கிறாள் என நினைத்துவிட்ட அத்தாயி, “இப்போ சோறு வேண்டாம். ஒரு தம்ளாரு சுடு தண்ணி மாத்தரம் கொண்டாரச் சொல்லு” என்றாள்.
சில வினாடிகளில் மருமகள் வந்தாள். சூடான நீரோடு அல்ல; சுடச்சுட வார்த்தைகளோடு.
“நானும் பார்த்துட்டிருக்கேன். சாணி பொறுக்கப் போகாம காத்தாலேயிருந்து மரத்தடியிலேயே கிடத்தி வெச்சிருக்கியே, என்ன நோக்காடு வந்துது? ஊரு ஒலகத்தில் வயசானவங்க இல்ல? அவங்களுக்கெல்லாம் நோய் நொடி வர்றதில்ல? இதா ஆச்சி அதா ஆச்சி, உயிர் போகப் போகுதுங்கிற மாதிரி கட்டிலே கதின்னு படுத்துக் கிடக்கிறே. யார் யாருக்கோ சாவு வருது; இந்தச் சனியனுக்கு ஒரு சாவு வருதா?” என்று பொரிந்து தள்ளினாள்.
ஒரு சாணக் கூடையை அத்தாயி மீது வீசிவிட்டுப் போனாள்.
நெடுஞ்சாலையில் சாணம் பொறுக்கிக்கொண்டிருந்தாள் அத்தாயி.
கூடையிலிருந்து சிதறிய சாணத்தில் ஊன்றிய கால்கள் சறுக்கிவிட, இடம் பெயர்ந்து, சாலையின் நடுவே மல்லாந்து விழுந்தாள் கிழவி.
கடூரமான ‘கிறீச்’ ஒலியோடு சாலையைத் தேய்த்து நின்றது ஒரு லாரி.
“ஏம்ப்பா நல்லப்பா, இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கிற இந்தக் கிழவி, சாணி திரட்டி வந்து வறட்டி தட்டிப் போட்டுத்தான் உன் வீட்டு அடுப்பு எரியணுமா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தான் டீ ஆற்றிக்கொண்டிருந்த நல்லப்பன்.
கடை எதிரே, லாரி ஓட்டுநரின் ஆதரவில் தன் தாய் நிற்பதைக் கண்டான்.
மவுனமாய்க் கிழவியை அழைத்துப் போய்க் கட்டிலில் கிடத்தினான்.
“காடு வா வாங்குது; வீடு போ போங்குது. இந்த வேலைக்கெல்லாம் போகச் சொல்லி உன்னை யார் அடிச்சது? நீ லாரியில் அடிபட்டுச் செத்துத் தொலைச்சிருந்தா, இப்போ கருமாதிச் செலவுக்குக்கூடக் கையில் காசில்ல. வேளா வேளைக்குக் கொட்டிகிட்டுச் சும்மா கிடந்து தொலையேன்.”
பேசி முடித்துவிட்டு நகர்ந்தான் நல்லப்பன்.
அதோ.....மருமகள் வந்துகொண்டிருக்கிறாள்!
____________________________________________________________________________________________________
சேலத்திலிருந்து வெளியான, ‘தேனமுதம்’ என்னும் சிற்றிதழில் வெளியானது.
குறிப்பு: ‘டெம்ப்ளே’ட்டை மாற்றியமைத்திட முயன்றபோது நேரிட்ட குழறுபடியில் ‘கருத்துப் பெட்டி’ காணாமல் போனது. தேடுகிறேன்...தேடிக்கொண்டே இருக்கிறேன்!
சேலத்திலிருந்து வெளியான, ‘தேனமுதம்’ என்னும் சிற்றிதழில் வெளியானது.
குறிப்பு: ‘டெம்ப்ளே’ட்டை மாற்றியமைத்திட முயன்றபோது நேரிட்ட குழறுபடியில் ‘கருத்துப் பெட்டி’ காணாமல் போனது. தேடுகிறேன்...தேடிக்கொண்டே இருக்கிறேன்!
மத்தளத்துக்கு இருபுறமும் அடி என்பதுபோல் கிழவியின் நிலை மனம் கனக்கிறது.
பதிலளிநீக்குtest
பதிலளிநீக்குtest
நீக்கு