ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

இழி தமிழ்!!!

இந்தப் பதிவைப் படித்த[தமிழ்மணத்தில் இணைப்பதற்கு முன்] உள்ளூர் நண்பரொருவர், “தமிழில் பெயர் வைக்காததால் எல்லாம் தமிழ் அழிந்துவிடுமா?” என்று என்னிடம் கேட்டார். “இதனால் மட்டும் அழிந்துவிடாது; இதனாலும் அழியும்” என்றேன்.
கதை:                                       க்ருஷிஹா

“அப்பா, உங்க பேத்திக்கு நல்ல பேர் சொல்லுங்க.” -அயலூரில் வேலை பார்க்கும் சிவக்குமார் கோவையிலுள்ள தன் தந்தைக்குத் தொ.பே. செய்தான்.

“வான்மதின்னு வெச்சுடலாம். அழகான தமிழ்ப் பேரு” என்றார் மயில்சாமி.

“இது வேண்டாம். யாரும் வைக்காத பேரா இருக்கணும்.”

“எனக்குத் தெரிய யாரும் இந்தப் பேரை வைக்கல.”

“வெச்சிருக்காங்க. வேற பேர் சொல்லுங்க.”

“யோசிக்கணும்.....”

சிறிது நேரம் யோசித்த பின்னர் மகனுடன் தொடர்பு கொண்டார் மயில்சாமி. “கவிமுகில் புதுமையான பேரு. குழந்தையைக் கவின்னோ முகில்னோ கூப்பிட்டுக்கலாம்” என்றார் குரலில் குதூகலம் பொங்க. 

“அப்பா, சொல்ல மறந்துட்டேன். நியூமராலஜிபடி கூட்டினா மூனு வரணும்” வெறுமனே சொல்லி வைத்தான் சிவக்குமார்.

ஆங்கில எழுத்து மதிப்பின்படி கூட்டினால் மூன்று வருகிற தமிழ்ப் பெயர்களை அப்போதே பட்டியலிட்டு, ‘நாவுக்கரசி’ என்னும் பெயரைத் தேர்வு செய்தார் மயில்சாமி; மகனிடமும் சொன்னார்.

அப்பா பரிந்துரைத்த பெயர்களை மனைவி நிதர்ஸனாவிடம்  ஒப்பித்தான் சிவக்குமார்.

“வான்மதி...கவிமுகில்...நாவுக்கரசி...கர்மம்...கர்மம்... இதெல்லாம்தான் புதுமையான பேர்களா? அவர்கிட்ட எதுக்குக் கேட்டீங்க?” -சுடச்சுட வார்த்தைகளைச் சிதறவிட்டாள் நிதர்ஸனா.

“அது வந்து... குடும்பத் தலைவராச்சேன்னு ஒரு ஃபார்மாலிட்டுக் கேட்டுத் தொலைச்சிட்டேன்.”

“சரி விடுங்க. ‘க்,ஷ்,ஹ்’ இல் ஆரம்பிக்கிற பேர்தான் வைக்கணும்னு குடும்ப ஜோதிடர் சொல்லிட்டார். அதனால, ‘க்ருஷிஹா’ங்கிற பேரை செலக்ட் பண்ணிட்டோம்னு அவர்கிட்ட இப்பவே சொல்லிடுங்க” என்றாள் நிதர்ஸனா.

சற்றே யோசித்தவள், “சொல்லி முடிச்சதும் ஃபோனைக் ‘கட்’ பண்ணிடுங்க” என்றாள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
2013ஆம் ஆண்டு, ‘நான்...நீங்கள்...அவர்கள்!!!’ என்னும் வலைத்தளத்தில் வெளியானது இப்பதிவு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக