புதன், 15 மே, 2024

மோடியின் மலைப்பூட்டும் மன வலிமை!!![நக்கல் பதிவல்ல]

பிற உயிரினத்தைப் போலவே, தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடிப் பெறுவதற்கும், இனவிருத்தி செய்வதற்கும் பிறந்தவன் மனிதன்; ஆசாபாசங்களுக்கிடையே பல்வேறு உணர்ச்சிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகிறவன்.

அவற்றில், ‘பாலுணர்ச்சி’ முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

மற்ற உணர்ச்சிகளைக் காட்டிலும், இதைக் கட்டுப்படுத்தவே பெரிதும் போராடுகிறான் அவன்.

இளமைப் பருவத்தில், இதைக் கட்டுப்படுத்துவதன் அவசியத்தையும் அதற்கான வழிவகைகளையும் போதிய அளவு அறியாததால் அதனுடனான போராட்டம் கடுமையாக உள்ளது.

திருமண வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு, புதிய புதிய கடமைகளைச் சுமப்பதாலும், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்வதாலும், அந்த உணர்ச்சியின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது[விதிவிலக்குகள் உள்ளன] என்று சொல்லலாம்.

மனிதன் மணவாழ்க்கை[குடும்பஸ்தன்] என்னும் பந்தத்திலிருந்து விடுபட்டு, அதாவது, மனைவியிடமிருந்து விலகிச் சென்று[மணவிலக்குப் பெற்றோ பெறாமலோ] தனியனாக வாழும்போது அதன் தாக்குதல் மிகப் பல மடங்கு[இளமைப் பருவத்தைக் காட்டிலும்] அதிகமாகிறது, அவன் ருசி கண்ட பூனை என்பதால்.

ஆக.....

மேற்கண்ட மூன்று நிலைகளில்[இளம் வயது>குடும்ப உறவு>தனிமை], அந்தத் தாப உணர்ச்சியுடன் அதிகம் போராடுவது குடும்பத் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியனாக வாழும்போதுதான்.

அதன் தாக்குதலால் மிகவும் பலவீனப்பட்டு, அது தொடர்பான பல குற்றங்களைச் செய்வதும் தவிர்க்க இயலாததாகிறது.

இந்நிலையை இயன்ற அளவுக்குத் தவிர்க்க.....

‘மடைமாற்றம்’ தேவப்படுகிறது. அதாவது, அவன் தன் ஆற்றலைக் கடின உழைப்பு, பொதுத் தொண்டு, பக்திமார்க்கம்[மனப்பூர்வமானது] போன்றவற்றில் முனைப்புடன் செலுத்துவது மிகு பயன் நல்குவதாக அமையக்கூடும்.

இவ்வாறு, அதி தீவிரமாகச் செயல்பட்டு, சாதனைகள் நிகழ்த்திப் பிரபலம் ஆனவர்கள் இம்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

நம் பிரதமர் மோடி அத்தகையவர்களில் ஒருவராவார்.

குடும்பஸ்தராகி மிகக் குறுகிய காலத்திலேயே மனைவியைப் பிரிந்து[பிரிவு ஏன், எப்படி நிகழ்ந்தது என்றெல்லாம அறிய முயற்சிப்பது அநாகரிகம்; குற்றச் செயல்] ‘தனியராக’ வாழ்ந்துகொண்டிருப்பவர்.

மனதைப் பக்தி மார்க்கத்தில் செலுத்தியது, முழு நேர அரசியல்வாதி ஆனது, ‘யோகா’ போன்ற உடல் நலனும் மன நலனும் பேணும் பயிற்சிகளில் ஈடுபட்டது போன்றவை ‘அந்த’ உணர்ச்சியின் கடும் தாக்குதலிலிருந்து விடுபட அவருக்குப் பெரிதும் உதவின என்று உறுதிபடச் சொல்லலாம்[மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் பரப்பவும், தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றவும் அவரின் பக்தி பயன்பட்டது என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது].

* * * * *

முக்கியக் குறிப்பு:

‘பிரமாணப் பத்திரத்தில் பிரதமர் மோடி தனது மனைவி பெயர் யசோதாபாய் என்றும், மனைவியின் வேலை & அவரது வருமானம் குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்’[இந்து தமிழ்].

https://www.hindutamil.in/news/india/1247463-owns-no-house-or-car-pm-modi-declares-assets-worth-rs-3-02-crore-1.html