சனி, 13 ஜனவரி, 2018

'தமிழை ஆண்டாள்'...வைரமுத்து செய்த தவறுகள்!

'கடவுளாகப் போற்றப்படும் ஆண்டாள் குறித்த கருத்தரங்கில் பக்தியுணர்வு கொண்டோரே பெருமளவில் கலந்துகொள்வார்கள். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தால், தன் மீது கொண்ட பொறாமையால் புழுங்கிக்கொண்டிருப்போருக்கு அது சாதகமாக அமைந்துவிடும்'  என்பதை அனுமானம் செய்யாமல், உரையாற்றுவதற்குக் கவிப்பேரரசு வைரமுத்து இசைவு தந்தது மிகப் பெரும் தவறு.

தூய்மையான இறைப்பணியை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்த தேவதாசிகள் வேறு; பின்னர் வந்த, பெரிய மனிதர்களின் சதைப்பசி தணித்த பொட்டுக்கட்டிய மாதர்கள் வேறு என்பதைப் போதிய வரலாற்றறிவு இல்லாதவர்களுக்குப் புரிய வைத்தல் எளிதல்ல என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் கவிஞர்.

''என் உரை முழுதும் ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதாகவே அமைந்தது. மேற்கோள் காட்டிய அயல்நாட்டவரின் கருத்து என் கருத்தன்று'' என்று உறுதியளித்ததோடு வருத்தம் தெரிவித்ததிலும் தவறில்லை. ஆனால், அவரின் செயல்பாடு கோழைத்தனமானது என்று தவறாக முடிவெடுக்கப்பட்டது. விளைவு.....

ஒரு ராஜாவையோ கூஜாவையோ கவிஞரின் தாயையும் சகோதரியையும் குறித்துத் தரக்குறைவாகப் பேச வைக்கும் சூழல் அமைந்தது. ஒரு முன்னணி வார இதழில், 10% உண்மையில் 90% பொய் கலந்து புளுகி வாசகனை முட்டாளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு நாலாந்தர எழுத்தாளனுக்கு, ''வைரமுத்துவைக் கைது செய்ய வேண்டும்'' என்று சொல்வதற்கான தைரியம் உண்டானது.

புரியவே புரியாத கதைகளை எழுதியே பிரபலமாகிவிட்ட விஷ்ணுபுரம் எழுத்தாளனுக்குக் கவிஞரைச் சாடுவதற்கான வாய்ப்பு உருவானது.

கூஜா தூக்கிக்கு அந்த ஆளின் ஆபாச பாஷையிலேயே வைரமுத்து பதிலடி தந்திருக்க வேண்டும்; தரவில்லை; தமக்கே உரிய தனித்துவமான தமிழ்நடையில் மற்ற போலி ஆன்மிகவாதிகளையும் விளாசியிருத்தல் வேண்டும். செய்யவில்லை.

''நான் ஆண்டாள் குறித்துத் தரக்குறைவாக ஏதும் பேசவில்லை. என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டோர்தான் என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்;  என்னைக் கைது செய்ய வேண்டும் என்கிறார்கள்.

நான் கைது செய்யப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டால், சிறைவாசம் முடிந்து இன்னொரு 'தண்ணீர் தேசம்' புதினத்துடனோ, கள்ளிக்காட்டு இதிகாசத்துடனோ, கருவாச்சி காவியத்துடனோ, ஆகச் சிறந்த சிறுகதைத் தொகுப்புடனோ வெளியே வருவேன்.

அவை எனக்கு ஞானபீடம் என்ன, அதனினும் உயர்ந்த நோபல் பரிசையே பெற்றுத்தரும் '' என்று இறுமாப்புடன் அறிவித்திருக்க வேண்டும்.

அறிவித்திருந்தால்.....

கவிப்பேரரசு வைரமுத்து வசீகரமான வைர வார்த்தைகளுக்கு மட்டும் சொந்தக்காரரல்ல; வைரம் போன்ற நெஞ்சுறுதியும் கொண்டவர் என்பதை இந்தத் தமிழ் மண் புரிந்துகொண்டிருக்கும்.

கவிப்பேரரசு இது குறித்துச் சிந்திப்பாரா?