திங்கள், 15 ஜனவரி, 2018

கனிமொழியின் கேள்விக்கு அறிவுஜீவிகளின் பதில் என்ன?

கருணாநிதி மகள் கனிமொழி அண்மையில், ''திருமலை ஏழுமலையான் சாமிக்குச் சக்தி இருந்தால், அது தனக்குரிய விலைமதிப்பற்ற சிலைகளையும், பொன் ஆபரணங்களையும் தானே பாதுகாத்துக்கொள்ளலாமே, கட்டுக்காவல் எதற்கு?'' என்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் கேள்வி எழுப்பியுள்ளார். இது ஆத்திக அன்பர்களுக்குப் பெரும் மன உளைச்சலை உண்டுபண்ணியுள்ளது.

பல்வேறு ஆத்திக அமைப்புகளும் 'நாத்திகை' கனிமொழிக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், திருப்பூரில் நிகழவிருக்கும் தி. மு.க. வின் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அக்கூட்டத்தில் கனிமொழி பங்கு பெறுவதற்குத் தடை விதிக்க வேண்டுமாய் 'இந்து மக்கள் கட்சி' நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாக இன்றைய 'காலைக்கதிர்'[15.01.2018] நாளிதழ், செய்தி வெளியிட்டுள்ளது. [காவல் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை].

இச்செய்தி நம் மக்கள் மனங்களில் பெரும் வியப்பையும் திகைப்பையும் தோற்றுவித்துள்ளது.

வழக்கு தேவையா?

கனிமொழி ஒரு சராசரிப் பெண்.  அபார அறிவாற்றல் படைத்தவர் என்று சொல்ல இயலாது. அவர் கேள்வி எழுப்பியதைக் கண்டித்து வழக்குத் தொடுப்பது தேவையற்றது. காரணம்.....

திருமலையான் மீது பெரும் பற்றுக்கொண்ட ஆத்திக அன்பர்களில் ஏராள அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரால் கனிமொழிக்குச் சரியான பதிலடி கொடுக்க முடியும்.

அப்படிக் கொடுத்தால்.....

கனிமொழி என்னும் நாத்திகை மட்டுமல்ல, வேறெந்தவொரு நாத்திகையோ நாத்திகனோ இம்மாதிரியான கேள்விகளை எழுப்பிப் பக்தர்களின் மனங்களைப் புண்படுத்த மாட்டார் என்பது திண்ணம்.

ஆத்திக அன்பர்கள் நன்கு சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.

நன்றி.