செவ்வாய், 16 ஜனவரி, 2018

காயம்பட்ட காமமும் குணப்படுத்தும் 'ஓஷோ'வும்!!

லக அளவில், விற்பனையில் சாதனை படைத்த நூல்களில், [மறைந்த]‘ஓஷோ’வின் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்பதும் ஒன்று என்கிறார்கள். அதை வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தது.  என்னைப் பொருத்தவரை, அது என்னுள் காமத்தைத் தூண்டவில்லை; கடவுளையும் காட்டவில்லை.

தற்செயலாக, 'நந்தன்'[மே 2012] வலைப்பதிவில் வெளியான அந்நூல் குறித்த ஓஷோவின் கருத்துரை[தமிழில்] பார்வையில் பட்டது. படித்தபோது, ஓஷோ எந்த அளவுக்கு மனித மனங்களைப் படித்திருந்தார் என்பது புரிந்தது. 
#நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். உண்மையில் எழுதியதல்ல. என் பேச்சைத் தொகுத்து எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு, 'காமத்திலிருந்து கடவுளுக்கு'. அதற்குப் பிறகு என்னுடைய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டன. ஆனால், மற்றவற்றைப் படித்தார்களா என்பது சந்தேகம்தான். குறிப்பாக, இந்தியாவில் எல்லாரும் படித்தது காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகத்தை மட்டும்தான். அவர்கள் எல்லாரும் அதை விமர்சனம் செய்தார்கள்; எதிர்த்தார்கள். இன்னும் அதைப் பற்றிக் கட்டுரைகளும் மறுப்பு நூல்களும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மகாத்மாக்கள் அதை மறுத்துககொண்டே வருகிறார்கள். மற்ற புத்தகங்களைப் பார்க்கவும் இல்லை. குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா? நான் ஏதோ ஒரே புத்தகத்தைத்தான் எழுதியது போல.

மக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள். காமமே காயமாகி விட்டது. அதைக் குணப்படுத்தியாக வேண்டும்.

உடலுறவில் ஏற்படும் பரவசம், தியானத்தின் ஒரு சிறு பகுதியின் ஆரம்பத்தை உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும். காரணம், அப்போது மனம் நின்று விடுகிறது. காலம் நின்று விடுகிறது. அந்தச் சில வினாடிகளில் காலமும் இருப்பதில்லை. மனமும் இருப்பதில்லை. நீங்கள் பரிபூரண மவுனத்திலும் பரவசத்திலும் ஆழ்ந்து விடுகிறீர்கள்.

மனமற்ற நிலைக்கும், பரவச நிலைக்கும் காலமற்ற நிலைக்குமான வேறு வழி எதுவுமே இல்லை. மனம் கடந்தும் காலம் கடந்தும் செல்வதற்கு வழி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு உடலுறவு தவிர வேறு வழியில்லை. தியானத்தின் முதல் அடையாளத்தை நிச்சயமாக அதுதான் காட்டுகிறது.

நான் மக்களுக்கு இந்த உண்மையைச் சொல்வதால்தான் உலகமே என்னைக் கண்டனம் செய்கிறது.

காமத்திலிருந்து அதி பிரக்ஞைக்குச் செல்வது பற்றி நான் பேசப்போய், உலகம் முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன்; கண்டிக்கப்பட்டேன். ஏன் கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை. என் புத்தகம், முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லாச் சன்னியாசிகளும் அதைப் படித்துவிட்டார்கள்.

இந்து, சமண, கிறித்துவ, புத்த சன்னியாசிகள் என்று யாராக இருந்தாலும் சரி, சன்னியாசிகளே அந்தப் புத்தகத்திற்குச் சிறந்த வாடிக்கையாளர்கள். சில மாதங்களுக்கு முன்பு, இங்கே புனாவில் சமண மாநாடு ஒன்று நடந்தது. என் செயலாளர் ஆச்சரியமான விஷயம் ஒன்று சொன்னார். சமண சன்னியாசிகள் இங்கே வந்து அந்தப் புத்தகத்தை மட்டுமே கேட்டார்கள். அது...'காமத்திலிருந்து கடவுளுக்கு'. அதை வாங்கி, தமது ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு சத்தமில்லாமல் வெளியே போனார்கள். அவர்கள் வந்ததும் போனதுமே தெரியவில்லை என்றார் என் செயலாளர்# 
**************************************************************************************************
மொழிப் பிழைகள் மட்டுமே திருத்தப்பட்டன.

நன்றி:  [இடுகை...நந்தன்,மே,2012]