வியாழன், 11 ஜனவரி, 2018

தமிழருவி மணியனின் 'புத்த ஞானம்'!

'ராணி' பொங்கல் சிறப்பிதழில்[14.01.2018] தமிழருவி மணியன் அவர்கள், 'கனியட்டும் புத்த ஞானம்' என்னும் தலைப்பின் கீழ் எழுதிய கட்டுரையில், புத்தரின் வாழ்வில் இடம்பெற்றதாகச் சொல்லி ஒரு நிகழ்வை விவரித்துள்ளார்.
நிகழ்வு[உண்மையோ கதையோ] வெகு சுவையானது. அதன் முடிவில் மணியன் அவர்கள் தம் விருப்பத்தையும் பதிவு செய்துள்ளார். அது நம் மனதை நெருடுகிறது. படியுங்கள்.

#ஒரு நாள் புத்தர் பெருமான் தன்னுடைய சீடர்களில் ஒருவரை மதுரமான குரலில் அருகில் வருமாறு அழைத்தார்.

அவர் அழைத்த சீடர், 'தீட்சை' முடிந்து, ஞானம் கனிந்து, தர்மத்தை மக்களிடம் உபதேசிப்பதற்காகப் பயணம் புறப்படும் நிலையில் இருந்தார்.

''பூர்ணா! நீ எந்தப் பிரதேசத்தில் தர்ம யாத்திரை செல்லப் போகிறாய்?'' என்று  கேட்டார் புத்தர்.

''சூனா பராந்தகம் என்ற இடத்தில் சுவாமி'' என்றார் சீடர்.

இருவருக்கும் இடையில் உரையாடல் தொடர்ந்தது.

''மகனே! அந்தப் பகுதி மக்கள், நீ தர்மத்தைப் போதிக்கும்போது உன்னை நிந்தனை செய்து வசைமாரி பொழிந்தால் என்ன செய்வாய்?'' 

''இவர்கள் நல்லவர்கள். கை நீட்டிக் காயப்படுத்தாமல் வாயளவில் நிற்கிறார்களே என்று நான் மகிழ்ச்சி கொள்வேன் சுவாமி.''

''வாய் திறந்து வசை பாடியவர்கள் கை நீட்டி அடிக்கவும் செய்யலாம். அப்போது உன் நிலை என்னவாக இருக்கும்?''

''இவர்கள்தான் எவ்வளவு நல்லவர்கள்! ஆயுதங்கள் கொண்டு தாக்காமல் வெறுங்கைகளால் அடிப்பதோடு நிறுத்திக்கொண்டார்களே என்று அகமகிழ்வேன் சுவாமி.''

''சரி, ஆயுதங்களால் அவர்கள் உன்னைத் தாக்கிவிட்டால் அவர்களை நீ எப்படி எதிர்கொள்வாய்?''

''இவர்கள் மிக மிக நல்லவர்கள். 'பிறவித்தளை' யிலிருந்து விடுபட ஒவ்வொருவரும் எந்தெந்த வகையிலோ பாடுபடும்போது, எனக்கு இவர்கள் எளிதாக முக்திக்கு வழி செய்துவிட்டார்களே என்று கைகூப்பி வாழ்த்துவேன் கருணை வேந்தே.''

''பூரணா, உனக்குப் 'புத்த ஞானம்' கனிந்துவிட்டது. போய் வா.''

சீடர், புத்தர்பிரானிடம் விடை பெற்றுக்கொண்டார்.# 

கதை முடிந்தது. மணியன் அவர்களின் 'விருப்பை' வெளிப்படுத்தும் வரிகள் கீழே.....

//.....நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் 'புத்த ஞானம்' கனிந்தால்.....

அதைவிட அமைதியான வாழ்க்கை வேறேது!//

நெருடல்:
புத்தரின் சீடருக்குப் 'புத்த ஞானம்' வாய்த்ததில் தவறேதும் இல்லை. அவர் ஒண்டிக்கட்டை; முற்றும் துறந்தவர். இருப்பதும் இறப்பதும் அவருக்கு ஒன்றுதான். ஆனால், குடும்பிகளான நமக்குப் 'புத்த ஞானம்' வாய்த்த[உலகில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் 'புத்த ஞானம்' வாய்ப்பதென்பது சாத்தியமே இல்லை] பின்னர்.....

நமக்குப் பொல்லாங்கு விளைவிக்கும் எத்தர்களிடம் பணிந்து பணிந்து போனால், நம் குடும்பம் அதோகதிதான். அவர்கள் நம் வீட்டுப் பொருள்களை மட்டுமல்ல, பெண்டு பிள்ளைகளையும் அல்லவா அபகரித்துவிடுவார்கள்!!!

'புத்த ஞானம்' நமக்கெல்லாம் ஒத்துவராதுதானே?
=====================================================================================

'ராணி' வார இதழுக்கும் தமிழருவி மணியன் அவர்களுக்கும் நம் நன்றிகள்.