வெள்ளி, 8 மே, 2020

மரணம் நேர்வது எப்படி?

பிறப்பிலிருந்து இறப்புவரை நம் உடம்பை இயங்கச் செய்பவை கோடிக்கணக்கான உயிரணுக்களே.

அணுக்களின் மிக முக்கியப் பகைவர்கள் சின்னஞ்சிறு நச்சுக் கிருமிகள்[Viruses]. இவை தொற்று நோய்க் கிருமிகளைவிடவும் அபாயகரமானவை. மிகக் கொடிய நோய்களை உருவாக்கும் சக்தி படைத்தவை. 

சுயமாக வாழ்வதற்கான சக்தி இவற்றுக்கு இல்லை. உயிரணுக்களிடமுள்ள சக்தியை அபகரித்துத்தான் இவை உயிர் வாழ்கின்றன. அந்தச் சக்தியை இவை பெறுவது எப்படி?

உயிரணுக்களைப் பாதுகாப்பவை அவற்றின் மீது படர்ந்துள்ள சவ்வுகள். அந்தச் சவ்வுகளைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிடுகிற அளவிறந்த எண்ணிக்கையிலான வைரஸ்கள் உயிரணுக்களைத் தாக்கிச் சேதப்படுத்துகின்றன; அழித்துவிடுகின்றன. அவற்றின் ஆற்றலைப் பெற்று மனித உடம்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில்தான் நமக்கு இறப்பு நேர்கிறது என்கிறார்கள் உயிரியல் அறிஞர்கள்[மணிமேகலைப் பிரசுரத்தின் ‘அறிவியல் விந்தைகள்’].

                                         *                                     *                                   *


ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள் அழியும் காட்சி!
ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் இறக்கும் கடைசி கட்டத்தை வீடியோ படம் பிடித்து அசத்தியிருக்கின்றனர், ஆஸ்திரேலியாவிலுள்ள லா ட்ரோப் பல்கலைக் கழக விஞ்ஞானிகள்.
இந்த அபூர்வ காட்சி படம் பிடிக்கப் படுவது, இதுவே முதல் முறை.....

.....வெள்ளை அணுக்கள் இறப்பதற்கு முன், சில வினோத மூலக்கூறுகளை வெளியே தள்ளுவது தெரியவந்தது.
அழியும் வெள்ளை அணு, திடுதிப்பென்று இயக்கத்தை நிறுத்திவிடுவதாகவே விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால், அவை, 'வீக்கம், வெடிப்பு, சிதறல்' என்று மூன்று நிலைகளைக் கடந்த பிறகே அழிவதை வீடியோ அம்பலப்படுத்தியது. இக்கண்டுபிடிப்பை, 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற ஆய்வு இதழ் வெளியிட்டு உள்ளது. 'ஒரு வெள்ளை அணு வெடிக்கும்போது பாசி மணிச்சரம் போன்ற சிதறல் ஏற்படுகிறது. பின் அந்தச் சரத்திலுள்ள மணிகள் உதிர்ந்து, சிதைகின்றன' என்கிறார் வீடியோ ஆய்வுக் குழுவின் இணை தலைவர், ஜார்ஜியா அட்கின் ஸ்மித்.
பாசி மணி சிதறல் எதற்காக வெளிப்படுகிறது? 'நோய்களை உண்டாக்கும் தொற்றுக்கள் உடலில் புகுந்திருக்கின்றன என்ற சேதியை, இறந்து கொண்டிருக்கும் வெள்ளை அணு, அருகே உள்ள மற்ற அணுக்களுக்கு தெரிவித்து எச்சரிக்க இந்த ஏற்பாடாக இருக்கலாம்' என்கிறார் அட்கின் ஸ்மித்.
தொற்றுக் கிருமிகள் இறந்த வெள்ளை அணுக்களைக் கைப்பற்றி, உடலுக்குள் பரவும் விதம் பற்றி மருத்துவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு மேலும் தெளிவை ஏற்படுத்தும். 'வைரஸ், பாக்டீரியா போன்றவை உடலின் பிற பாகங்களுக்குப் பயணிப்பதற்கு வாகனமாக இருப்பது எது என்பது தெரிய வந்திருக்கிறது' என்கிறார் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளர் டாக்டர் இவான் பூன்.
இந்தத் தகவலை வைத்து, நோய்களுக்குச் செம்மையான சிகிச்சை முறைகளையும், வலுவான நோய்த் தடுப்பு மருந்துகளையும் உருவாக்க முடியும் என, மருத்துவ விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நன்றி: தினமலர் https://www.dinamalar.com/news_detail.asp?id=1277495
===================================================================================