வெள்ளி, 25 ஜனவரி, 2019

'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்!

''தண்டியலங்காரம்' என்னும் பழந்தமிழ் இலக்கண நூலைப் பயில அவர் ஆசைப்பட்டார். ஆனால், முறையாக அந்நூலைக் கற்பிப்பார் எவரையும் கண்டறிய அவரால் இயலவில்லை.

தண்டியலங்காரத்தில் தேர்ந்த ஒருவரைப் பற்றி ஒரு நண்பர் மூலமாக அறிந்தார். அவரோ ஊர் ஊராக அலைந்து திரியும் ஒரு பரதேசி என்பதையும், தீவிரக் 'கஞ்சா' பிரியர் என்பதையும் அறிந்து வருந்தினார்.

ஆயினும், மனம் தளராமல் எவ்வாறேனும் அவரிடமே தண்டியலங்காரம் கற்பது என்றும் முடிவெடுத்தார். விசாரித்ததில், அந்தப் பரதேசி, தாமாக விரும்பினாலன்றி எவருக்கும் தமிழ் கற்பிக்க மாட்டார் என்பது தெரிந்தது.

ஆழ்ந்து யோசித்ததில் ஒரு வழி தென்பட்டது.

பரதேசியைச் சந்தித்தார்; பழகினார்; அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் இவரும் சென்றார்.

பரதேசி கஞ்சா அடிக்க விரும்பியபோதெல்லாம் தம்முடைய செலவில் அதை வாங்கிவந்து அவருக்குக் கொடுத்து மகிழ்வித்தார். அப்புறம்.....

அப்புறம் என்ன, தம் பிரிய நண்பராக ஆகிவிட்ட இவருக்குத் தண்டியலங்காரத்தை முழுமையாகக் கற்றுக்கொடுத்தார் பரதேசி. பரதேசி யாரோ. இந்தத் தமிழ்ப் பித்தர் யார்?

'மகா வித்துவான்' என்று போற்றப்பட்ட தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி:  ஆர்.சண்முகம் அவர்களின், 'சிந்தனையாளர்களின் சுவையான அனுபவங்கள்'; நந்தினி நூலகம், சென்னை, 600 088.
------------------------------------------------------------------------------------------------------------------