நான் படைத்த ஒருபக்கக் கதைகளில் மிகப் பல வாசகரைப் பெற்ற கதை இது. பெரும் எண்ணிக்கையில் மேலும் பலர் வாசிக்கக்கூடும் என்பதால் மீள்பதிவாக வெளியிடுகிறேன்.
‘ஜோலார்ப்பேட்டை – ஈரோடு’ பயணியர் ரயில் வண்டி பொம்மிடி தாண்டி, தடதடத்து ஓடிக்கொண்டிருந்தது.
கண்களுக்கு விருந்தாகிக் கண நேரத்தில் காணாமல் போகும் மலை சார்ந்த காடுகளையும் வயல்வெளிகளையும், இருக்கையில் சாய்ந்தவாறு ‘பராக்கு’ப் பார்த்துக்கொண்டிருந்த தேவகி, வலது கால் பாதம் ‘நறுக்’ என்று மிதிக்கப்பட்டதால், காலைப் பின்னுக்கு இழுத்ததோடு, திடுக்கிட்டுப் பார்வையை உள்ளுக்கிழுத்தாள்.
முந்தானை சற்றே விலகியிருந்த தன் ஒரு பக்கத்து மார்பகத்தை எதிரே அமர்ந்திருந்த மாதவன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தாள்.
“ஏய்யா என் காலை மிதிச்சே?” என்று கேட்டாள்.
“காத்து வாங்குது. இழுத்து மூடுடி” என்றான் அவன்.
மாராப்பை இழுத்து மூடுவதற்கு மாறாக, அவன் மீது அலட்சியப் பார்வையை வீசிவிட்டு, மீண்டும் இயற்கையழகை ரசிக்கத் தொடங்கினாள் தேவகி.
‘நறநற’வென்று பற்களைக் கடித்தான் மாதவன்.
‘நறநற’வென்று பற்களைக் கடித்தான் மாதவன்.
வீடு போய்ச் சேர்ந்ததும், “உன்கிட்ட ஒன்னு கேட்கணும். டீ கொண்டா” என்று உத்தரவிட்டான்.
தேனீருடன் வந்த தேவகியின் இன்னொரு கையில் நீண்டதொரு அரிவாளும் இருந்தது.
“நீ என்ன கேட்கப் போறேன்னு எனக்குத் தெரியும். சேலை கட்டுற ஒரு பொம்பள எல்லா நேரமும் இழுத்து இழுத்துப் போர்த்திகிட்டு இருக்க முடியாது. கவனக்குறைவா இருக்கும்போது மாராப்பு விலகத்தான் செய்யும். கட்டுன புருஷனா இருந்தாலும் இதைக் கண்டுக்காம இருக்கணும். அப்படி இருக்க உன்னால முடியாது. நமக்குக் கல்யாணம் ஆன இந்த ஒரு வருசத்தில் ஒரு நூறு தடவையாவது “இழுத்து மூடு’’ன்னு சொல்லியிருப்பே. ஒன்னு செய். உன் கையால என்னோட ரெண்டு கொங்கையையும் அறுத்துப் போட்டுடு. அப்புறம் உனக்கு எப்படியோ, எனக்கு நிம்மதி கிடைச்சுடும்.”
தேனீர்க் குவளையை ஒரு புறம் வைத்துவிட்டு அரிவாளை மட்டும் நீட்டினாள் தேவகி.
“என்னை மன்னிச்சுடு தேவகி” என்று சொல்ல நினைத்தான் மாதவன். ஆனால், சொல்லவில்லை; ஆழ்ந்த யோசனையுடன் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.
================================================================================