திங்கள், 28 ஜனவரி, 2019

தமிழ்மணமே, ஏன் இந்தப் பாராமுகம்?!

கீழ்க்காணும் கதையைப் படியுங்கள். மிக மிக மிகப் பலமுறை முயன்றும், தமிழ்மணம் இதை இணைத்துக்கொள்ள மறுக்கிறது[இது என்னளவில் அவ்வப்போது நிகழ்கிறது].  தமிழ் வளர்க்கும் பணியை மிக மிக மிகச் சிறப்பாகச் செய்துவரும் தமிழ்மணம் இதற்கான காரணத்தையும் சுட்டிக்காட்டுவதில்லை. ஏன் இந்தப் பாராமுகம்?[அமேசான் கிண்டிலில் வெளியான என் மின் நூல்களின் பட்டியலைப் பதிவு செய்வது தவறோ?!]

வாழ்க தமிழ்மணம்! 


கதை.....

''மிதுன், நாளை பெண் பார்க்கப் போறோம். இவளுகள்ல ஒருத்தியை செலக்ட் பண்ணு'' என்று சொன்ன மகாலட்சுமி, தன் வசமிருந்த புகைப்படக் கற்றையை மிதுனிடம் நீட்டினாள்.

அதைப் பெற்றுக்கொள்ள மறுத்த மிதுன், ''தமிழரசியை உயிருக்குயிராய் நேசிச்சிக் காதல் கல்யாணம் பண்ணினேன். அவ உயிரோடு இருக்கும்போது இன்னொரு கல்யாணமா? இனியும் இந்தப் பேச்சை எடுத்தீங்கன்னா நான் பொல்லாதவனா மாறிடுவேன்'' என்று சூடான வார்த்தைகளோடு கனல் கக்கும் பார்வையையும் தன்னைப் பெற்றவளின் மீது வீசினான்.

''ஆறு மாசம் முந்தி நீங்க ரெண்டு பேரும் போன கார் விபத்துக்குள்ளானதில் உன் பெண்டாட்டிக்கு அடி வயித்தில் பலமான அடி. இனி குழந்தை பெத்துக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனால.....''

குறுக்கிட்டான் மிதுன். ''அதனால இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு அவசியம் இல்ல. அனாதை ஆசிரமத்தில் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்.''

''யாரோ பெத்துப்போட்டதை என் பேரப் புள்ளையா என்னால ஏத்துக்க முடியாது.''

''அது உன் விருப்பம். நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு தமிழரசியே என்னை வற்புறுத்தியிருக்கா. நீயும் அதைத்தான் சொல்லுறே. இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்துத்தான், தமிழரசிக்குக் கருப்பை சிதைஞ்சிடிச்சுன்னு டாக்டர் சொன்னப்பவே நான் கருத்தடை அறுவை பண்ணிட்டேன்'' என்று சொல்லிச் சிரித்தான் மிதுன்.

மகாலட்சுமியின் கையிலிருந்த புகைப்படங்கள் நழுவித் தரையில் விழுந்து சிதறின.
------------------------------------------------------------------------------------------------------------------
இம்மாதிரிக் கதை ஏதும் வந்ததில்லை என்பது என் நம்பிக்கை. அது தவறுன்னா, தவறாம என்னை மன்னிச்சுடுங்க!