திங்கள், 28 ஜனவரி, 2019

நான் காதல் போதையில் 'கிறுக்கிய' 'கிளு கிளு' கவிதைகள்!!!

நான் காதல் பைத்தியமாய் இருந்தபோது ‘கிறுக்கிய’ காதல் கவிதைகளில் சில கீழே.... ‘கால்கட்டு’க்குப் பிறகு காதல் கசந்தது; எனினும், இன்றுவரை கவிதை  இனிக்கிறது! இது என்ன விந்தை!!

அவள் கொடுத்த அது!

திருமணப் பத்திரிகையோடு வந்தாய்.
திடுக்கிட்டேன்.
“கல்யாணம் அக்காவுக்கு” என்று நீ
சிரித்தபோது
ஆறுதலடைந்தேன்.
எல்லோருக்கும் அதைக் கொடுத்துவிட்டு
எனக்கும் கொடுத்தாய்...
துயரத்தில் சரிந்தேன்.
நீ எனக்குக் கொடுத்தது.....
 அன்றொரு நாள் நான் உனக்குக் கொடுத்த
காதல் கடிதம்!

நீயுமா சிரிக்கிறாய்!?
தேர்வில்
நான் தோல்வியடைந்த போதும்
எல்லோருக்கும் இனிப்பு வழங்கினேன்.
ஏளனமாய்ச் சிரித்தார்கள்;
நீயும் சேர்ந்து சிரித்தாய்.
நான் இனிப்பு வழங்கியது
வகுப்பில் முதல் மாணவியாய் நீ
தேர்ச்சி பெற்றதற்காக.
இதை உனக்குப்
புரிய வைப்பது எப்படி?
புரியாமல் பரிதவிக்கிறேன் பெண்ணே.

மழையோ மழை!
மழையில் நீ நனைந்தபோது
குடை கொடுத்தேன்.
வாங்க மறுத்தாய்.
‘என்னவள் மழையில்... நான் குடையிலா?’...
குடையிருந்தும் நனைந்தேன்.
நீயோ கண்டுகொள்ளவில்லை.
என் கண்களில் கண்ணீர் மழை!

ஆஹா...கொண்டாட்டம்!
எனக்கு வயது இருபத்தெட்டு.
இரண்டு வருடமாய்த்தான் பிறந்தநாள்
கொண்டாடுகிறேன்.
காரணம்.....
உன் மீது கொண்ட காதல்.
புரியவில்லையா?
நான் கொண்டாடுவது.....
உன் பிறந்த நாளை!

சொர்க்க ரேகை!
பல நாட்களாய் நான் குளிக்கவில்லை.
அப்பா திட்டினார்;
அம்மா கெஞ்சினாள்.
நான் “லவ் யூ” சொன்னபோது
என் கன்னத்தில் பதிந்த உன் விரல் ரேகைகள்
அழிந்துவிடும் என்று
என்னவளே.....
அவர்களிடம் சொல்ல முடியுமா?!
----------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவு indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.