புதன், 30 ஜனவரி, 2019

அர்ச்சகரைக் காப்பாற்றத் தவறிய ஆஞ்சநேயர்!!!

'நாமக்கல் கோட்டைச் சாலையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சேலம் சாலையில் உள்ள தனியார் நூற்பாலை அலுவலகத்தில் உதவிப் பொதுமேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்['அர்ச்சகர்' என்று தினத்தந்தியும் தினகரனும் குறிப்பிட்டுள்ளன]. நேற்று முன்தினம், ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு மாலை அணிவிக்கும்போது  8 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். சேலத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்று செய்தி வெளியிட்டுள்ளது ''தமிழ் இந்து'[29.01.2019] நாளிதழ்.

தினத்தந்தியும் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவே குறிப்பிட்டுள்ளது. தினகரன் நாளிதழ் அவர் 'இறந்துவிட்டார்' என்னும் சோகச் செய்தியைத் தந்துள்ளது.

வெங்கடேசன் குடும்பத்தார்க்கு நம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.
மேற்கண்ட செய்தியை உங்களுடன் பகிர்வதற்கு அல்ல இந்தப் பதிவு. வழக்கம்போல, சாமிகள் குறித்த நம் ஐயப்பாட்டை முன்வைப்பதுதான்.

சொந்த வேலைகளை ஒத்திவைத்துவிட்டு, ஆஞ்சநேயருக்குப் பணிவிடை செய்த ஒரு நல்ல மனிதர் இத்தகையதொரு அவல நிலைக்கு ஆளாகலாமா?

தன்னுடைய உண்மையான பக்தன் விபத்துக்கு உள்ளாகவிருப்பது ஆஞ்சநேய சாமிக்குத் தெரியாதா? அவர் ஏன் தன் பக்தனைக் காப்பாற்ற முன்வரவில்லை? 

தனக்கான சேவையில் ஈடுபடுகிற பக்தனையே கண்டுகொள்ளாத ஆஞ்சநேயர் அவ்வப்போது வந்துபோகிற பக்தர்களுக்கு உதவுவார் என்பது என்ன நிச்சயம்?

உடனே, பழம்பிறவி, மறுபிறவி, விதி, அவர் செய்த பாவம், புண்ணியம்,  என்று வெங்கடேசன் அவர்களின் மரணத்திற்கு ஏதேனும் ஒரு காரணம் கற்பிப்பார்கள். இது வழக்கமாக, கடவுள்களைக் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்பதற்குப் பக்தர்கள் கையாளும் தந்திரம்தான்.

மிகப் பல ஆண்டுகளாக எனக்குள்ளதொரு தீராத ஐயப்பாடு..... 

எந்தவொரு நம்பிக்கையில் லட்சோபலட்சம் பக்தர்கள் இந்த ஆஞ்சநேயரைக் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுகிறார்கள்?!
------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்மணம் என் பதிவுகளுக்கு நிரந்தரத் தடை விதித்துள்ளதால், இப்பதிவை நான்  தமிழ்மணத்தில் இணைக்கவில்லை.

இப்பதிவு indiblogger  முகப்பில் இடம் பெற்றுள்ளது.