#ஐயப்பனைத் தரிசித்து வந்த பின்னர் கனகதுர்கா அவருடைய குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டார்; பாவி என்று தூற்றப்பட்டார்; மாமியாரால் அடித்து உதைக்கப்பட்டார்; 'பொது இடத்தில் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே வீட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்' என்று சொல்லி அவரின் கணவரே அவரை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்# -இது இன்றைய நாளிதழ்ச் செய்தி['இந்து தமிழ்' நாளிதழ், 23.01.2019].
குடும்பத்தார் ஒருபுறம் இருக்கட்டும், கனகதுர்காவின் வாழ்க்கைத் துணைவரிடம் சில கேள்விகள்.
*உங்களின் இன்பதுன்பங்களில் பங்குகொள்பவர் உங்களின் மனைவி. அது போல, எத்தனை முறை நீங்கள் அனுபவித்த துன்பங்களையும் சோகங்களையும் ஐயப்பசாமி பகிர்ந்துகொண்டிருக்கிறார்? இந்தக் கேள்விக்கு உங்களின் உள்மனதைத் தொட்டுப் பதில் சொல்லுங்கள், எத்தனை முறை?[நம்மைப் படைத்தவன் அவனே; காப்பவனும் அவனே. எல்லாம் அவன் செயலே என்று பொத்தாம்பொதுவாக அடித்துவிட வேண்டாம்].
ஐயப்பன் மட்டுமல்ல, எந்தவொரு கடவுளின் 'இருப்பு'ம் இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த உயிர்களின் எண்ணிக்கையில், 0000000000000000000000001%[வரையறை செய்ய இயலாது]கூட இல்லாத, மிக மிக மிகக் கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கக் கற்ற மனிதர்களில், வெகு சிலரின் அனுமானத்தால் வாழ்பவர்கள் ஐயப்பனைப் போன்ற கடவுள்கள்.
அனுமானக் கடவுளான ஐயப்பனை நம்புகிற நீங்கள், உங்களின் மனைவி அவரைத் தரிசிக்கச் சென்றது அவர் மீதுள்ள தூய பக்தியால்தான்; அவரின் பிரமச்சரியத்துக்குப் பங்கம் விளைவிப்பது போன்ற கெட்ட நோக்கத்தால் அல்ல என்பதை நம்ப மறுப்பது ஏன்?
கோபிக்க வேண்டாம். எதிர்பாராத வகையில் நீங்கள் விபத்துக்குள்ளாகியோ[100% கற்பனை], நோய்வாய்ப்பட்டோ, படுத்தபடுக்கையாக இருக்க நேரிட்டால், ஓடோடி வந்து, உடனிருந்து ஆறுதல் சொல்லி, விரைவில் உடல்நலம் பெறப் பிரார்த்தித்து, இரவுபகலாய்க் கண் விழித்துப் பணிவிடை செய்பவர் உங்களின் பாசத்துக்குரிய மனைவியே தவிர, கடவுள்களல்ல என்பதைப் புரிந்துகொள்ள முயல்வீர்களா?
ஐயப்பன், சிவபெருமான் தன் உள்ளங்கையில் ஏந்திய விந்துவில் பிறந்தவர் என்பது குறித்த அசிங்கமான ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம்.
கடவுள்களைக் குடும்பிகளாகவும், பிரமச்சாரிகளாகவும், மனிதர்களைப் போல ஆசாபாசங்களுக்கு ஆட்படுபவர்களாகவும் உருவகித்திருப்பது சரியா தவறா என்பனபோன்ற விவாதமும் வேண்டாம்.
இப்போது மட்டுமல்ல, இனி எப்போதும் உங்களின் தேவை உங்களின் மனம் கவர்ந்த மனைவியுடன் சுகவாழ்வு வாழ்வதுதான். எனவே.....
உடனடியாக, 'பெரிந்தலமன்னா' வில், அரசு விடுதியில் அடைக்கலம் புகுந்துள்ள உங்களின் அன்புக்குரிய துணைவியை அழைத்துவந்து உங்களுடன் வாழ அனுமதியுங்கள்.
செய்வீர்களா கனகதுர்காவின் கணவன் அவர்களே?
------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------
|