வெள்ளி, 25 ஜூலை, 2025

யார்..... யார்..... யார்..... ‘அவர்’ யாருங்க?!

“எனக்குச் சாவு நேராமல் காத்தருள்” என்று எந்தவொரு பக்தனும்[இஸ்லாமியனோ கிறித்தவனோ இந்துவோ] இந்நாள்வரை தன் கடவுளிடம் கோரிக்கை வைத்ததாக அறியப்படவில்லை.

காரணம், மரணம் என்பது கடவுள் வகுத்த வாழ்க்கை நெறி. அவர் வகுத்த அந்த நெறியை மாற்றியமைக்க அவர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்[மரணம் நிகழாமல்போனால், எக்குத்தப்பாக உயிர்களின் எண்ணிக்கை பெருகுதல் போன்ற விபரீத விளைவுகள் உண்டாகும்] என்பார்கள் பக்தி நெறி பரப்புவோர்.

மரணத் துன்பத்தை அனுபவிப்பது கடவுள் வகுத்த வாழ்க்கை நெறி என்றால், வறுமை, நோய், பகைமை, ஆதிக்க வெறி போன்றவற்றால் விளையும் துன்பங்களை அனுபவிக்கும் வாழ்க்கை நெறியை வகுத்தவர் யார்? 

அவர் யாருங்க?

அந்த அவரும் கடவுள்தான் என்பதால் அவரிடம் கோரிக்கைகள் வைத்து வழிபடுவதால் பயன் ஏதும் இல்லை.

ஏனென்றால், தான் வகுத்த நெறியை மாற்றியமைத்திட அவர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்!

வியாழன், 24 ஜூலை, 2025

பிள்ளைப் பாசத்தைச் சிதைக்கும் கள்ளக் காம உறவுகள்! தேவை உடனடி ஆய்வுகள்.


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தன் கள்ள உடலுறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதி, தான் பெற்ற இரு மழலைகளையே கொலை செய்த ஒரு மிகு காமுகிக்கு[+கள்ளக் காமுகன்] இன்று தண்டனை வழங்கியிருக்கிறார் நீதியரசர்[முழு விவரம் காணொலிகளில்].

தீர்ப்பு குறித்து இணையத்தில்[+காணொலிப் பின்னூட்டங்கள்] மிகப் பல கருத்துரைகள் வெளியாகியுள்ளன.

கருத்துரைப்பது நம் நோக்கமல்ல.

அவ்வப்போதோ, அரிதாகவோ இது போன்ற[காமக் களியாட்டத்திற்கு இடையூறாக இருப்பதாக எண்ணிப் பெற்ற மகவைச் சுவற்றில் அடித்துக் கொன்றாள் ஒரு தாய் என்பதும் ஒன்று] அவலங்கள் இந்த மண்ணில் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது மிக அவசியம் என்பதை வலியுறுத்துவது இப்பதிவின் நோக்கம் ஆகும்.

வழிமுறைகள்:

இம்மாதிரிக் குற்றவாளிகளுக்கென்று[பந்தப் பாசங்களை முற்றிலுமாய்த் துறந்து, பாலுறவே பிரதானம் என்ற முடிவுக்கு வருதல், பெற்ற மகளைத் தந்தையே வன்புணர்வு செய்தல், தாயே தன் மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்றவை> முற்றிய மனநோய்கள்] தனிச் சிறைகளை உருவாக்கி, குழந்தைப் பருவம் தொட்டு, இவர்கள் வளர்க்கப்பட்ட... தன்னிச்சையாய் வளர்ந்த சூழ்நிலைகளை உளவியல் மருத்துவர் குழுக்களைக்கொண்டு நுணுகி ஆராய்வது போன்றவை.

இதன் மூலம், குழந்தைப் பருவத்திலிருந்து இவர்கள் எதிர்கொண்ட இழி நிகழ்வுகளையும், அவற்றின் பாதிப்புகளையும் கண்டறிவதன் மூலம், ஆணோ பெண்ணோ இனி எவரும் இம்மாதிரிச் சூழல்களை எதிர்கொள்ளாதிருப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றைச் செயல்படுத்தலாம்[பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களின் உதவியுடன்].

இதுவொரு ஆரம்ப நடவடிக்கையாயினும், காலப்போக்கில் இதை விரிவுபடுத்துவதன் மூலம் இம்மாதிரிக் குற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம், அல்லது வெகுவாகக் குறைக்கலாம்.

இதுவொரு சாமானியனின் பரிந்துரை. பாலியல் மருத்துவ நிபுணர்களால் மட்டுமே இதற்கான செயல் திட்டத்தைச் சிறப்பாக வகுத்தளிக்க இயலும்.
                                 *   *   *   *   *
தொடர்புடையதொரு செய்தி[பயப்படாம படியுங்க]: