அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

தமிழ்நாட்டின் அடுத்த 'முதலமைச்சர்' தமிழிசையே!!!

தமிழகப் 'பாசக' தலைவர் தமிழிசை அவர்களின் கனிவான கவனத்திற்கு.....

''தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்பினாலும் அஞ்சமாட்டோம்'' என்று, திரையுலகம் நடத்திய, காவிரி நீருக்கான அறப்போராட்டத்தில் ஆர்ப்பரித்தார் நடிகர் சத்தியராஜ். ''ஐ.டி. ரெய்டுக்கும் அஞ்ச மாட்டீர்களா?'' என்று நீங்கள் கொடுத்த அடியால் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார் அந்த நடிகர்.
''எனக்கு அந்த ஆசை இல்லை, இந்த ஆசை இல்லை. இதுவரை என் வீட்டில் ஐ.டி.ரெய்டு நடந்ததில்லை'' என்று உங்களுக்குப் பதிலளிக்கும் முகமாக ஏதேதோ உளறிக்கொட்டியிருக்கிறார்.

சத்தியராஜைப் பொருத்தவரை, மேடைகளில்தான் ''ஆய்...ஊய்...'' என்றெல்லாம் அலட்டிக்கொள்வாரே தவிர, உண்மையில் அவர் ஒரு தொடைநடுங்கி நடிகர். உங்களுக்கு அவர் பதிலளித்தபோது, மைக் பிடித்திருந்த அவரின் கை வெடவெடவென்று நடுங்கியதே, அதைக் கவனித்திருந்தால் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

உள்ளுக்குள் பயந்து நடுங்கினாலும், தமிழ் மக்கள் தன்னை ஒரு கோழை என்று எண்ணிவிடாமலிருக்கவே உங்களுக்குப் பதில் சொல்லித்  'தில்' காட்டியிருக்கிறார் நடிகர்.

'காவி'யத் தலைவி தமிழிசை அவர்களே,

சத்தியராஜை பகிரங்கமாகக் கேள்வி கேட்டதன் மூலம் ஒரு பெரும் தவற்றை இழைத்துவிட்டீர்கள் நீங்கள். 

நீங்கள் அவரிடம் கேள்வி கேட்டதற்குப் பதிலாக, அதே கேள்வியை, வருமான வரித்துறையினர் மூலம், குறுந்தகவல் அனுப்பி ரகசியமாகக் கேட்டிருந்தால்.....

இந்நேரம் ஓடிவந்து உங்களிடம் சரணடைந்திருப்பார் சத்தியராஜ்; பாசகவில் உறுப்பினராகவும் ஆகியிருப்பார்.

இதே குறுஞ்செய்தியை பாரதிராஜா, கமல்காசன், ரஜினிகாந்த் போன்ற திரையுலகப் பிரமுகர்களுக்கும் அனுப்பியிருந்தால், ஒட்டுமொத்த திரையுலகமே உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கும்.

இதே அஸ்திரத்தைப் பிரயோகித்து, ஸ்டாலின், வைக்கோ, திருமாவளவன், இராமதாஸ், அன்புமணி, கொங்குதேசக் கட்சி ஈஸ்வரன், தினகரன், வேல்முருகன், எடப்பாடி, பன்னீர் மற்றும் இன்னபிற அரசியல் கட்சித் தலைவர்களையும் உங்கள் காவிக் கட்சியில் இணைய வைத்திருக்கலாம். 

இத்தகையதொரு புத்திசாலித்தனமான காரியத்தை இனியேனும் நீங்கள் செய்து முடியுங்கள். முடித்தால்.....

தேர்தலே நடத்தாமல், நீங்கள் தமிழ்நாட்டின் 'அன்னப்போஸ்ட்' முதலமைச்சர் ஆகிவிடலாம். மத்தியில் மோடி ஆட்சி நீடிக்கும்வரை உங்களின் ஆட்சியும் நீடிக்கும்.

வாழ்த்துகள் தமிழிசை!