புதன், 4 ஏப்ரல், 2018

காவிரி நீர் தமிழனுக்குக் கானல் நீர்தான்!

கடந்தகாலப் போராட்டங்கள் தோல்வியில் முடிந்ததற்கான தலையாய காரணம் என்ன என்பதை  ஆராயாமல், காவிரி நீருக்காகப் போராடும் நம்மவர்களை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி நீரில் உரிய பங்கைப் பெறுவதற்காக,  தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் சமுதாய அமைப்புகள் பலவும் போராடிவருகின்றன.

'உள்குத்துகள் ஒருபுறம் இருப்பினும் அனைவரது போராட்ட நோக்கமும் ஒன்றே என்பதாலும், இது தொய்வில்லாமல் தொடரும் போராட்டம் என்பதாலும்  வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.

'ஸ்கீம்' குறித்தான விளக்கத்தை உச்சநீதிமன்றத்திடமிருந்து பெற்ற பிறகும்  ஏதேனும் ஒரு சப்பைக் காரணத்தை முன்வைத்து நடுவணரசு பின்வாங்கினால், உச்ச நீதிமன்றமே வாரியத்தை  அமைக்கும் என்று நம்பலாம்.

இங்கே நம் அடிமனதை நெருடிக்கொண்டிருக்கும் ஒரு சந்தேகம்.....

வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால், இனியேனும் காவிரி நீரில் நமக்குரிய பங்கு தங்குதடையின்றிக் கிடைத்துவிடுமா?

கிடைக்காது; கிடைக்கவே கிடக்காது. காரணம்.....

உச்சநீதிமன்றத்தின் எந்தவொரு தீர்ப்பையும் கர்னாடக அரசு மதித்துப் பின்பற்றியதில்லை. மேலாண்மை வாரியத்தையும் அது ஏற்காது; மதிக்காது.

நீதிமன்ற அவமதிப்புக்காக, அந்த அரசு மீது நடுவணரசும் நடவடிக்கை எடுத்ததில்லை.

மீண்டும் மீண்டும் மேல் முறையீடுகள் செய்து, அவை பலனளிக்காமல் போகும் நிலையில் தமிழர்கள் மீதான மிரட்டல் ஆயுதத்தையும், தேவைப்பட்டால் தாக்குதல் ஆயுதத்தையும் கையாளுவதே கன்னடக்காரர்களின் போராட்ட முறையாகும்.

இவர்களின் வன்முறை வெறியாட்டத்தைத் தடுக்க நடுவணரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததில்லை; இனியும் எடுக்காது.

உச்ச நீதிமன்றமும் கைகட்டி வேடிக்கை பார்க்கும்.

இதற்குக் கடந்தகால நிகழ்வுகளே சாட்சி.

இப்போது வாரியம் அமைக்கப்பட்டால் பழைய வரலாறு[தாக்குதல்]  திரும்பும்.

''அங்கே தமிழன் தாக்கப்பட்டால் இங்கே கன்னடனைத் தாக்குவோம்'' என்று அறிக்கை விடுவானே தவிர, செயல்படுத்துவதில் தமிழன் தீவிரம் காட்டமாட்டான்;  காட்டியதும் இல்லை. இது இவனுக்கான குணம்.

விதிவிலக்காகச் சிலர்  தாக்குதலில் இறங்கினாலும்.....

''கர்னாடகாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இங்கே உள்ள கன்னடர்களின் எண்ணிக்கையவிடவும் அதிகம். எனவே, நாமும் அவர்களும்  மோதிக்கொண்டால் அதிக இழப்புக்கு உள்ளாவது நம் இனமாகத்தான் இருக்கும்'' என்று  இங்குள்ளவர்களே எச்சரிக்கை செய்வார்கள்.  அடுத்த கணமே சிறு சிறு தாக்குதல்களும் நிறுத்தப்பட்டுவிடும். காவிரி நீருக்கான நம்மவர் போராட்டமும் முடங்கிவிடும்

ஆக, அவ்வப்போது முகிழ்க்கும் மோதல்களில் தமிழர்கள் தோற்று, கன்னடர்கள் வெற்றி பெறுவதற்குக் காரணம்.....

அவர்கள் கையாளும் இந்தக் கடைசி ஆயுதம்தான். இதை முறியடிப்பதற்கான வலுவான ஆயுதம் நம்மிடம் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
=================================================================================