வியாழன், 5 ஏப்ரல், 2018

இது விஞ்ஞானமா, அஞ்ஞானமா, வெறும் அனுமானமா?!?!

விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படுகிற ‘உண்மைகள்’ இந்தப் பிரபஞ்சத்திற்கு முற்றிலும் புதியவை அல்ல; அவை ஏற்கனவே பிரபஞ்ச வெளியின் எங்கோ ஓரிடத்தில் இருந்தவை; இருப்பவை. மனம் ஒன்றி, தீவிரச் சிந்தனையில் ஈடுபடும்போது விஞ்ஞானிகளால் அந்த உண்மைகளைக் கிரகித்துக் கொள்ள முடிகிறது” என்று எவரேனும் சொன்னால் நாம் நம்பமாட்டோம்.
“நம்புங்கள். இப்படிச் சொல்பவர்ஓப்பன்ஹீமா என்கிற அணுசக்தி விஞ்ஞானி” என்கிறார் மறைந்த வாழ்வியல் அறிஞர் எம்.எஸ்.உதய மூர்த்தி.

நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வை முன்வைத்து, இது உண்மை என நிறுவவும் முயல்கிறார்.

அமெரிக்காவில் 'எட்கார் கேசி' என்று ஒரு ஃபோட்டோகிராஃபர் 1920 இல் வாழ்ந்தார். ஒரு சமயம் அவருக்குத் திடீரென்று பேசவராமல் போகவே, ஒரு மருத்துவர் அவரை ‘ஹிப்னாடைஸ்’ செய்து குணப்படுத்தினார்.

சில நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் பேசவராமல் போனது. அவரை மீண்டும் ஹிப்னாடைஸ் செய்தார் மருத்துவர். ஹிப்னாடைஸ் நிலையிலிருந்த எட்கார் கேசி, தாமே தம் குரல் நிலையை எடுத்துக் கூறி அதற்கான சிறந்த...மருத்துவர் அறியாத சிகிச்சை முறையையும் கூறினாராம்.

அதற்கப்புறம், தாமே சுயமாக ஹிப்னாடைஸ் நிலைக்குச் சென்று, தம்மை நாடி வந்த நோயாளிகள் குணமடவதற்கான வழிகளைக் கூறினாராம். இப்பணியை முப்பது ஆண்டுகள் தொடர்ந்து செய்தாராம்!

எதிர்கால அரசியல், வருங்கால உலகம், தனிமனித எதிர்பார்ப்புகள் போன்றவை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டபோது, சுய ஹிப்னாடிசத்தின் மூலம் பதில்கள் சொன்னாராம். அவர் சொன்னவாறே எல்லாம் நடந்ததாம்.

“இந்தத் தகவல்களையெல்லாம் எங்கிருந்து பெறுகிறீர்கள்?” என்று வினவியபோது, “ஆகாயக் குறிப்பேடுகளிலிருந்து...பிரபஞ்ச வெளியில் தேங்கிக் கிடக்கும் பிரபஞ்ச அறிவுத் தொகுப்பிலிருந்து” என்றாராம்!


‘பிரபஞ்ச வெளியில் ஊடுருவியிருக்கும் மாபெரும் சக்தியின்பால் முனைப்புடன்  நம் மனதைச் செலுத்துவதன் மூலம் இதை நிகழ்த்துவது சாத்தியம் ஆகலாம்’ என்கிறார்களாம் அறிவியல் அறிஞர்கள்.

நம்ப முடியல. உண்மையா இருந்தா நல்லதுதான்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ என்ற நூலிலிருந்து திரட்டித் தொகுத்தது இப்பதிவு.