ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

'சமூக வலத்தளங்களால் களையிழந்த கோயில் திருவிழாக்கள்'...புலம்பும் தினகரன் நாளிதழ்!!!

//ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களின் தாக்கத்தாலும் 'மூடநம்பிக்கை ஒழிப்பு' என்னும் பெயரால் நடக்கும் பிரச்சாரங்களாலும் கோயில் திருவிழாக்கள் களையிழந்து வருகின்றன// என்று செய்தி வெளியிட்டு, அழுது ஒப்பாரி வைத்திருக்கிறது பகுத்தறிவுப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களால் வெளியிடப்படும் தினகரன்[01.04.2018] நாளிதழ்.

''பகுத்தறிவாளர்களின் பொய்ப் பிரச்சாரங்களைத் தமிழ் மக்கள் அடியோடு புறக்கணித்துவிட்டார்கள். கோயில்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கைப் பெருக்கமும், கோயில் விழாக்களில் ஆர்வத்துடன் பங்குகொள்ளும் அவர்களின் அளப்பரிய ஆர்வமும் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன'' என்று ஆன்மிகப் பரப்புரையாளர்கள் ஆர்ப்பரித்துத் திரியும் நிலையில் தினகரன் இவ்வாறு புலம்பியிருப்பது நம்மைப் பெருவியப்பில் ஆழ்த்துகிறது.

திருவிழாக்கள் களையிழந்ததற்குரிய காரணங்களாகச் சமூக வலைத்தளங்களைக் காரணம் ஆக்குவதோடு நில்லாமல், மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரையையும் அதற்கான பட்டியலில் இணைத்திருக்கிறது தினகரன்.

புராணங்களில் சொல்லப்பட்ட பொய்யான ஆபாசக் கதைப் பாத்திரங்களுக்கு உலோகத்தாலும் ஐம்பொன்னாலும் சிலை செய்து, அவற்றைக் கடவுளாக்கி, தங்கத்தாலும்  வைர வைடூரியங்களாலும் ஆன நகைகளால் அலங்கரித்து, சின்னஞ்சிறுசுகளைப் போல, தேரிலும் சப்பரங்களிலும் வைத்து, ஊர்கூடி உலா வந்து விழாக் கொண்டாடுவது மூடநம்பிக்கை அல்ல என்கிறதா தினகரன்?

கருத்தரங்கங்களில் கலந்துகொள்வது, நல்ல சொற்பொழிவுகளைக் கேட்பது, சமுதாயத்திற்கு நற்பணி புரிந்தவர்களுக்கான பாராட்டுக் கூட்டங்களில் பங்கு பெறுவது என்று மனதைத் தூய்மைப்படுத்துவதற்கான எத்தனையோ பகுத்தறிவு சார்ந்த வழிகள் இருக்கும்போது, தேர்த்திருவிழாக்களில் கலந்துகொண்டு பொன்னான நேரத்தை வீணடிப்பதுதான் சிறந்தது என்கிறாரா தினகரன் கட்டுரையாளர்?

இந்தச் செய்திக்கு உள்ளடங்கியதாக இந்த இதழ் வெளியிட்டுள்ள விழாக் காட்சியைக்[படம்] கவனியுங்கள்.
சாமியைத் தேரில் வைத்து இழுக்கிறார்கள், சரி. சில ஆசாமிகளையும் சாமியுடன் வைத்து இழுக்கிறார்களே, இது மூடநம்பிக்கை அல்லவா? 

சாமிக்கு இணையாக இவர்களை அமர வைத்தவர் யார்? எது? 

மற்ற பக்தர்களோடு தரையில் நடந்துவந்து தீபாராதனை காட்டி, மணியடித்து பூஜை செய்தால் சாமி ஏற்காதா?

அவர்களுக்கு மட்டுமே புரிந்த மொழியில் மந்திரங்கள் சொல்லி, அப்படிச் சொன்னால்தான் சாமி ஏற்கும் என்று நம்ப வைத்து, அதைக் காலங்காலமாகக் கடைபிடிப்பதெல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டுவது குற்றமா? 

தினகரனார் சிந்திப்பாரா?

'உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்று எந்தவொரு வித்தியாசமும் இன்றி மக்கள் ஒன்றுதிரண்டு ஒற்றுமையுடன் நடத்துவது தேர்த்திருவிழா' என்றும் பெருமைப்பட்டிருக்கிறார் கட்டுரையாளர்.

உண்மையில், சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களாலும் பணக்காரர்களாலும் நடத்தப்படுவதுதான் இம்மாதிரி விழாக்கள். தாழ்ந்தவனும் ஏழையும் இங்கே வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. இந்த இடைவெளிதான், இன்று அங்கிங்கெனாதபடி கோயில் விழாக்களில் மோதல்களும் கலவரங்களும் இடம்பெறுவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. இது குறித்தெல்லாம் கட்டுரையாளர் அறியாரா? அறியாதவர் போல் நடிக்கிறாரா?

கி.பி.1893 செப்டம்பர் 11ஆம் நாள், அமெரிக்காவின் சிக்காகோ சர்வசமய மாநாட்டில் பேசிய விவேகானந்தர், ஆன்மிகத்தால் மட்டுமே மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்னு குறிப்பிட்டாராம்.

நாம் சொல்கிறோம்: பகுத்தறிவால் மட்டுமே அது சாத்தியம் என்று எங்கள் பெரியார் சொல்லியிருக்கிறார்.

அயல்நாடுகளிலெல்லாம் விழாக் கொண்டாடுகிறார்களாம். இங்கே களையிழந்துவிட்டதாம். இங்குள்ள அத்தனை பத்திரிகையாளர்களும் பட்டிதொட்டியெல்லாம் நடக்கிற விழாக்களைப் பற்றிப் பக்கம் பக்கமாகச் செய்தி வெளியிட்டுப் பக்தகோடிகளைக் குஷிப்படுத்துகிறார்களே, அப்புறம் எப்படி தேர்த்திருவிழாக்கள் களையிழக்கும்? எதற்கு இந்தப் பொய்ச்செய்தி?

64 நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் அவதரித்த தமிழகத்தில் விழாக்கள் களையிழந்துவிட்டதே என்று கவலைப்படுகிறார் தினகரனார். இவரால் ஆன்மிகப் பெரியவர்கள் என்று போற்றப்படுகிற நாயன்மார்கள், மன்னர்களை மூளைச் சலவை செய்து தம் வசப்படுத்தி, மக்களுக்காகவும் அகிம்சை நெறி பரப்புவதற்காகவும் பாடுபட்ட ஆயிரக்கணக்கான சமண மதத்தவரைக் கழுவேற்றிய வரலாற்றை ஏன் இங்கே இருட்டடிப்புச் செய்தார் இந்த நாளிதழ் ஆன்மிகர்?

இன்றைய தலைமுறையினரின் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பெண்களை இழிவுபடுத்துதல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்கு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தின் மூலம் தேர்த்திருவிழாக்களைப் பொலிவிழக்கச் செய்ததுதான் காரணம் என்கிறார் இந்தக் கடவுள் பக்தர்.

இம்மாதிரிக் குற்றங்களுக்கு வேறு வேறு சமூகச் சூழல்களே காரணம்[அறிஞர் குழுக்களால் ஆராயப்பட வேண்டும்]; மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரைகள் காரணமல்ல என்பது கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்.

முடிவாக, தினகரனாருக்கு நாம் அறிவுறுத்த விரும்புவது ஒன்று உண்டு. அது.....

'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்.'
---------------------------------------------------------------------------------------------------------------------------------