சனி, 31 மார்ச், 2018

'ஆன்மிக அரசியல்வாதி' சொன்னது குட்டிக்கதையா, வெட்டிக்கதையா?!

ஓர் எழுத்தாளருக்கு, உயிர்மைப் பதிப்பகம் சார்பில் சென்னையில்  பாராட்டு விழா நடந்ததாம். அதில் கலந்துகொண்டு பேசிய ஆன்மிக அரசியல்வாதி ஒரு குட்டிக்கதையும் சொன்னாராம். 
[ஆதாரம்: webdunia வெள்ளி, 30 மார்ச் 2018] 

அந்த அரசியல்வாதி சொன்ன குட்டிக்கதை? படியுங்கள்.

#சமீபத்தில் நான் படித்த புத்தகத்தில் இருந்த கதை. ஒரு தனி விமானத்தில் விஞ்ஞானிகள் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒருவர் மட்டும் பைபிளைப் படித்துக் கொண்டு இருந்தார்.

அவரைப் பார்த்து மற்றொரு விஞ்ஞானி, ''இப்போது உள்ள அறிவியல் உலகத்தில் கடவுள், பைபிள் என்று படித்துக் கொண்டு இருக்கிறீரே?'' என்று கேட்டு, தனது முகவரியை கொடுத்து, ''இனியாவது கடவுளைத் தூக்கிப் போட்டுவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

விமானம் தரை இறங்கியவுடன் மீண்டும் அவரைச் சந்தித்த விஞ்ஞானி, ''உங்கள் முகவரியை கொடுங்கள். நான் முடிந்தால் வந்து பார்க்கிறேன்'' என்றார். 

அவரும் தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். அதில் 'தாமஸ் ஆல்வா எடிசன்' என்று இருந்தது. உடனே அவரிடம் மன்னிப்புக் கேட்டதுடன், அவரைத் தனியாக வீட்டில் சந்திக்க நாளையும் பெற்றுக்கொண்டு சென்றார்.

குறிப்பிட்ட நாளில் அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின்   வீட்டுக்குச்  சென்றார்.   அங்கு ஏராளமான கண்டுபிடிப்புகள் இருந்தன. அவற்றைப் பார்த்து, ''நீங்கள்தானே இதையெல்லாம் செய்தது?'' என்று கேட்டார். அதற்கு எடிசன்,   ''இல்லை.   நான் ஒரு நாள் வெளியில்   சென்றுவிட்டு,   மீண்டும்வந்து   வீட்டுக்   கதவைத் திறந்தபோது இதெல்லாம் இருந்தது'' என்றார்.

''படைப்பு இருந்தால் கண்டிப்பாகப் படைப்பாளியும் இருப்பார்'' என்று விஞ்ஞானி கூறினார்[ஒப்புக்கொண்டார்]. பின்னர் தாமஸ் ஆல்வா எடிசன், அவற்றைக் கண்டுபிடித்தவர் தான்தான் என்று உண்மையைச் சொன்னார்.

இதைக் கதையாக நினைக்க வேண்டாம். விஞ்ஞானி கூறியதைச் சிந்தித்து பார்க்க வேண்டும். படைப்பு என்று ஒன்று இருந்தால் அதைப் படைத்த படைப்பாளியும் கண்டிப்பாக இருப்பார். எனவே கடவுள் இருப்பது உண்மை. கடவுள் இருக்கிறார் என்பதைக் கூற இந்தக் கதை ஓட்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது எ‌ன்று ர‌ஜி‌னிகா‌ந்‌த் கூ‌றினா‌ர்#

ஆன்மிக அரசியல்வாதி ரஜினி அவர்கள் கதையை இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். பரவாயில்லை. நமக்கெல்லாம் தெரிந்த கதைதான் இது.
கதையில், ''விஞ்ஞான யுகத்தில் கடவுள், பைபிள் என்றெல்லாம் படித்துக்கொண்டிருக்கிறீரே'' என்ற விஞ்ஞானியின் பேச்சு அவர் கடவுள் மறுப்பாளர் என்பதை எடிசனுக்குப் புரிய வைக்கிறது.

அவர் தன் வீடு தேடி வந்த நிலையில் அவரிடம், தன் கண்டுபிடிப்புகள் தானாகத் தோன்றின என்று கிண்டலாகச் சொன்னதன் மூலம் எந்தவொரு பொருளும் தானாகத் தோன்றாது என்பதை உணர வைக்கிறார் எடிசன்.

எடிசன் உணர்த்த நினைத்ததை உணர்ந்த அந்த விஞ்ஞானியும், ''படைப்பு என்று ஒன்று இருந்தால் படைப்பாளியும் இருப்பார்'' என்று சொல்லிக் கடவுள் இருப்பதை ஒப்புக்கொண்டதாகக் கதை பின்னப்பட்டிருக்கிறது. நாம் ரஜினிக்குச் சொல்ல நினைப்பது ஒன்று உண்டு.

ரஜினி அவர்களே,.

படைப்புத் தத்துவத்தும்கிறது இன்னிக்கி வரைக்கும் ஒரு பிடிபடாத தத்துவமாவே இருக்கு. பெரிய பெரிய தத்துவ ஞானிகள்னு சொல்லப்பட்டவங்க எல்லாம் இதுக்குக் காற்புள்ளி வெச்சிட்டுப் போயிருக்காங்களே தவிர முற்றுப்புள்ளி வைச்சவங்க யாருமில்ல. எடிசனும் ஒரு காற்புள்ளிதான் வைச்சுட்டுப் போனார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானியான அவர் கடவுளை நம்புறார்னா நாமும் நம்பணும்கிறது கட்டாயம் இல்லை. புரிஞ்சுக்குங்க. 

போகிற போக்கில், ''நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி''ன்னு சொல்லியெல்லாம் கைதட்டல் வாங்கிட முடியாது. ஒரு தடவை சொன்னது எப்படி நூறு தடவை சொன்னதா ஆச்சுன்னு ஆதாரபூர்வமா விளக்கணும்.

எல்லார்த்தையும் கடவுள் படைச்சார்னா, கடவுளைப் படைச்சவர் யார்ங்கிற கேள்விக்குப் பதில் சொல்லியாகணும். அவர் தாமாகத் தோனறினார்னோ, இருந்துகொண்டே இருக்கார்னோ சொல்லித் தப்பிச்சுட முடியாது. அதெல்லாம் எப்படி சாத்தியமாச்சுன்னு அத்துபடியா விளக்கியாகணும்.

கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான் யோக்கியன்னு நம்புற சமுதாயம் இது. நீங்களும் யோக்கியர்னு நம்பப்படணும்னா, நான் கடவுளை நம்புறவன்னு சொல்லிக்குங்க. தப்பில்ல. ஆனா, நாலுபேர் அறிய, கடவுள் இருக்கார்னு நிரூபிக்கிற முயற்சியில் நீங்கள் வெற்றி பெற முடியாது என்பதை மறக்க வேண்டாம். இப்போதைக்கு.....

உங்களுக்கு 'ஆன்மிக அரசியல்' போதும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++