கி.மு.287க்கும் கி.மு.212க்கும் இடைப்பட்ட காலத்தில், 'சைரக்யூஸ்'[Syracuse] நாட்டில் வாழ்ந்த அதிசயக் கணித & இயற்பியல் விஞ்ஞானி ஆர்க்கிமெடிஸ்[Archimedes of Syracuse was a Greek mathematician]
சைரக்யூஸ் நாட்டின் மன்னரிடமிருந்து அவசர அழைப்பு வந்தது இவருக்கு. இவரின் திறமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் மன்னர்.
அவர் சொன்னார்: ''ரோம் நம் மீது படையெடுக்கிறது. அவர்களின் கப்பல் படை நம் கடற்கரையை நெருங்கிவிட்டது. அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நாம் தோல்வியைத் தழுவுவோம்.''
அவருக்குத் தைரியம் ஊட்டிய ஆர்க்கிமெடிஸ், கடற்கரையை நெருங்கிக்கொண்டிருந்த எதிரியின் கப்பல் படைகளைக் குறி வைத்து, வளைந்த உலோகத் தகடுகளால் ஆன பிரமாண்டமான குழிந்த கண்ணாடிகளை அமைத்தார்.
எதிரிகளின் கப்பல்கள் கடற்கரையை நெருங்கியதும், அந்தக் கண்ணாடிகளைக் கொண்டு சூரிய ஒளியைக் குவியச் செய்து கப்பல்களின் மீது பாய்ச்சி, அவற்றைத் தீப்பற்றச் செய்தார். ரோம் படை பின்வாங்கியது. சைரக்யூஸ் மன்னர், ஆர்க்கிமெடிசைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்.
தோல்வியுற்ற ரோம், சைரக்யூஸ் மீது மீண்டும் படையெடுக்க அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது.
ஆர்க்கிமெடிஸ் என்னும் நிலவுக் கடவுளுக்கு விழா எடுத்து சைரக்யூஸ் மக்களும் படை வீரர்களும் களிப்பில் ஆழ்ந்திருந்த தருணத்தில் சைரக்யூஸ் கோட்டைக்குள் புகுந்துவிட்டது ரோமானியப் படை.
ஆர்க்கிமெடிசின் அறிவியல் அறிவை உணர்ந்து அவர் மீது மிக்க மதிப்புக் கொண்டிருந்த ரோமானிய மன்னர், ''ஆர்க்கிமெடிஸ் என்ற அற்புத மனிதரை ஒன்றும் செய்துவிடாதீர்கள்'' என்று ஆணை பிறப்பித்தார்.
ஆனால், அந்த ஆணை அனைத்து வீரர்களையும் சென்றடையாத நிலையில்.....
கடைவீதியில் அமர்ந்து ஒரு கணிதப் புதிரைத் தீர்ப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார் கணித மேதையான ஆர்க்கிமெடிஸ். ரோமானிய அரசர் பிறப்பித்த ஆணையை அறியாத ரோமானிய வீரன் ஒருவன் அவரைக் கொல்வதற்காக[கொல்வதற்கு வேறு காரணமும் சொல்லப்படுகிறது] உருவிய வாளுடன் நெருங்கினான்.
இதைக் கண்ணுற்ற ஆர்க்கிமெடிஸ், ''எனதருமை நண்பனே, கொஞ்சம் பொறு. கணிதப் புதிரை முடித்துவிடுகிறேன்'' என்று அன்புடன் வேண்டினார். அதைக் கண்டுகொள்ளாத ரோமானிய வீரனோ.....
வாளைப் பாய்ச்சி அந்த அதிசயக் கணித அறிவியல் மேதையின் உயிரைக் குடித்தான்.
இது நம் நெஞ்சைக் கனக்கச் செய்யும் ஒரு வரலாற்று நிகழ்வு.
இதை நீங்கள் ஏற்கனவே நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இருந்தும் இதை இங்கே நான் பதிவிடக் காரணம்.....
கொடூர மரணத்தைத் தழுவவிருந்த அந்தச் சில வினாடிகளில், மரண பயத்துக்குக் கிஞ்சித்தும் இடம் தராமல் ஆர்க்கிமெடிஸ் என்னும் அறிஞனால் எப்படித் தன் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடிந்தது என்னும் பிரமிப்புதான்.
ஆற்றும் வினையின்மீது கொள்ளும் அதீத ஆர்வமும், மனதை ஒருமுகப்படுத்த உதவும் இடைவிடாத மனப்பயிற்சியும்தான் காரணங்களோ?!
=================================================================================
நன்றி: விக்கிப்பீடியா; 'எடையூர் சிவமதியின் 101 விஞ்ஞானிகள்', நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை.
=================================================================================
நன்றி: விக்கிப்பீடியா; 'எடையூர் சிவமதியின் 101 விஞ்ஞானிகள்', நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை.