அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 5 ஜூன், 2019

சுமப்பதிலேதான் சுகம்! சுகம்!! சுகம்!!!

பக்தகோடிகளே,

குபேர சாமி, குலச்சாமி, ஆண் சாமி, பெண் சாமி, நான்கு தலைச்சாமி, அப்பாசாமி, அப்பனுக்குப் புத்தி புகட்டிய ஆறுமுகச்சாமி, ஐயப்பசாமி,  முனியப்பசாமி, கருப்பண்ணசாமி, அனுமன் சாமி என்றிப்படி ஏராள சாமிகள் இருப்பதாக நம்புகிறீர்கள்[நம்பாதீர்கள் என்றால் 'இவன் நாசகாரன்', அயோக்கியன் என்றெல்லாம் சாடுகிறீர்கள்].

நீங்கள் நம்புகிற சாமிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்வது எப்படிச் சாத்தியம் இல்லையோ அது போலத்தான் நீங்கள் சாமிகளுக்கு எடுக்கிற விழாக்களையும் எண்ணி முடிப்பது இன்றளவும் சாத்தியப்படவில்லை.

நீங்கள் எடுக்கிற விழாக்களில், தேர்...மன்னிக்கவும், திருத்தேர்[ஊடகக்காரர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள்] இழுப்பது, அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகள் நிறுவப்பட்ட சப்பரங்களை ஊர்வலமாகச் சுமந்து செல்வது போன்றவை முக்கிய விழா நிகழ்ச்சிகள் ஆகும்.

நீண்ட நாட்களாய் எனக்கொரு சந்தேகம்.

சப்பரங்களில் வைத்துச் சாமிகளைச் சுமக்கிற நீங்கள், சாமிகளுடன் சில ஆசாமிகளையும் சேர்த்துச் சுமக்கிறீர்களே, அது ஏன்? அவர்கள் கீழே நின்று தீபாராதனை காட்டினால் சாமிகள் கோபித்துக்கொள்ளுமா?
சாமிக்குப் பூஜை செய்பவர்களையும் சேர்த்துச் சுமப்பது பரம்பரை வழக்கம் என்பீர்களேயானால்.....

கிராமப்புறங்களில் நாட்டுப்புறச் சாமிகளைச் சப்பரங்களில் சுமந்து ஊர்வலம் செல்லும்போது, ''அந்தச் சாமிகளுக்குப் பூஜை செய்யும் பூசாரிகளையும் சாமிகளுக்குப் பக்கத்தில் அமரவைத்துச் சுமப்பதில்லையே, ஏன்?'' என்ற கேள்வி எழுகிறது.

உங்களால் நேர்மையாகப் பதில் சொல்ல முடியுமா?

முடியாது. எல்லாம் முன்னோர்கள் நடைமுறைப்படுத்தியது என்பீர்கள்.

யார் அந்த முன்னோர்கள்?

பணக்காரக் கோயில் பூசாரிகளைச்[அர்ச்சகர்கள்] சாமிகளுக்குச் சமமாய்த் தூக்கி உட்கார வைத்துக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்திய அவர்கள், கிராமப்புறத்துக் கோயில் பூசாரிகளைப் புறக்கணித்ததன் காரணம் உங்களுக்கு இன்றளவும் புரியவே இல்லையா?

அவர்கள் கடவுள்பாஷை எனப்படும் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள். இவர்களோ நீசத் தமிழ் மொழி மட்டுமே அறிந்தவர்கள் என்பதுதான் காரணம்.

இந்த ஒன்று மட்டும்தான் காரணமா, வேறு காரணங்களும் உள்ளனவா?

இத்தனை காலமாய் சிந்திக்கத் தவறினீர்கள். இனியேனும் சிந்திக்கப் பழகுவீர்களா? 
==================================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக