என் நண்பனுக்குத் திருமண ஆன புதிதில் நடந்த சுவைமிகு நிகழ்ச்சி. அவனே சொன்னது!
அன்று ஞாயிற்றுக் கிழமை. புலால் வாங்கிவரப் புறப்பட்ட என்னைத் தேக்கி, “அத்தைக்கும் மாமாவுக்கும் மட்டும் வாங்கி வாங்க” என்றாள் என் மனைவி.
“ஏன்.....நமக்கு?”
“வேண்டாம்.”
இன்னொரு ‘ஏன்?’ஐ முன்வைத்தேன் நான்.
“நீங்க ரொம்ப வருசமா அசைவம் சாப்பிடாம இருந்தீங்களாம். நான் வந்ததும் தலையணை மந்திரம் போட்டு உங்களைச் சாப்பிடப் பண்ணிட்டேனாம். என் மேல அபாண்டமா பழி சுமத்துறாங்க. நீங்க சைவத்துக்கே மாறிடுங்க” என்றாள் என்னவள், வருத்தமும் கோபமும் விரவிய குரலில்.
“பழி போட்டது யாரு?”
“உங்க அம்மாவும் அப்பாவும்தான்.”
“வத்தி வெச்சது யாரு?”
“யாரும் வைக்கல. அவங்க பேசினதை நானே ஒட்டுக் கேட்டேன்.”
“‘அது’ விசயத்தில் அலைபாயுற மனசைக் கட்டுப்படுத்துறதுக்காகக் கல்யாணம் ஆகும்வரை அசைவம் சாப்பிடுறதில்லேன்னு முடிவு பண்ணியிருந்தேன். அவங்க காரணம் கேட்டாங்க. பெத்தவங்ககிட்ட இதைச் சொல்ல முடியுமா? வெறுமனே பிடிக்கலேன்னு சொல்லி மழுப்பிட்டேன். நீ வந்தப்புறம் கட்டுப்பாடு இல்லாம சாப்பிட ஆரம்பிச்சுட்டேன். என் மன மாற்றத்துக்கான உண்மைக் காரணம் தெரியாததால உன்னைத் தப்பப் புரிஞ்சுகிட்டாங்க. மத்தபடி, உன் மேல ரொம்பவே பாசம் உள்ளவங்க. நடந்ததை மறந்துடு” என்றேன்.
“சரிங்க” என்றாள் என் இல்லத்தரசி, தெளிந்த மனதுடன்.
=================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக