நான் நானாகவும் நீங்கள் நீங்களாகவும் அவர்கள் அவர்களாகவும் அவரவர் இயல்புக்கேற்ப இருந்துவிடலாம். எல்லோரையும் இணைப்பதற்கு 'மனிதநேயம்' ஒன்று போதும்!

Thursday, April 19, 2018

தமிழகத்தில் ஒரே நாளில் மூடர்களின் எண்ணிக்கை 30% உயர்வு!!!

அட்சய திருதியை, தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய[என்றும் குறையாத] திருதியை என்கிறார்கள்.
இந்த நாளில் தங்கம் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது 'மக்களின் நம்பிக்கை' என்கிறார்கள் நகை வணிகர்கள்; வழிமொழிகிறார்கள் ஊடகக்காரர்கள். ஒரு வேண்டுகோள்.....
'மக்களின் நம்பிக்கை' என்பதை, 'மக்களின் மூடநம்பிக்கை' என்று திருத்தி வாசியுங்கள்.

'தமிழகத்தில் கடந்த ஆண்டு அட்சய திருதியை நகை விற்பனையை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்' என்பது இன்றைய ஊடகச்[19.04.2018] செய்தி.

'இந்த ஆண்டு விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது' என்பதோடு, 'இந்த ஓராண்டில் மட்டும்[ஒரே ஒரு நாளில்] தமிழகத்திலுள்ள முட்டாள்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது' என்ற தொடரையும் இணைத்துப் படியுங்கள்.
அட்சய திருதியை நாளில்தான் 'திரேதா யுகம்' தொடங்கியதாம். இதே நாளில்தான் 'முனிவர் பரசுராமர்' பிறந்தாராம். இந்தப் புனித நாளில்தான் சொர்க்கத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கை நதி, இந்தப் புண்ணிய பூமிக்கு இறக்குமதி செய்யப்பட்டதாம்.
இவை எல்லாமே புராணங்கள் சொல்லும் கற்பனை நிகழ்வுகள்.
இந்நிகழ்வுகள் இடம்பெற்ற நாளுக்கு 'அட்சய திருதியை' என்று பெயரிட்டு, அதைப் புனித நாளாக்கி, அந்நாளில் பொன்னால் ஆன அணிகலன்கள் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும்  என்று யாரெல்லாமோ புளுகிவிட்டுப் போனார்கள்.

அவர்களின் பொய்மொழி இன்று புதுப்பிக்கப்பட்டுப் பரப்புரை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்கள் கோடிகளில் புரளும் நகை வியாபாரிகள்; அவர்களால் 'கவனிக்கப்பட்ட' ஊடகக்காரர்கள்.

'கங்கையில் குளித்தெழுந்து மகாலட்சுமியை வழிபடணும்; உப்புக்குப் பூஜை பண்ணனும். அப்புறம், நகைக் கடைகளுக்குப் போய், தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் எல்லாம் வாங்கணும். வாங்கினால் அவற்றின் மதிப்பு  நாளும் பெருகிக்கொண்டே இருக்கும்......'

இப்படி இன்னும் எப்படியெல்லாமோ சொல்லிச் சொல்லிச் சொல்லி அள்ளக் குறையாத ஆசைகளை மக்களின் மண்டைகளுக்குள் திணித்துத் தம் வணிகத்தை மேம்படுத்துகிறார்கள்; செல்வத்தை அள்ளிக் குவிக்கிறார்கள் பொன் வணிகர்கள்.

பூட்டை உடைத்து வீடு புகுந்து திருடுகிறான் ஒருவன். அவன் குற்றம் புரிந்தவன் என்று தண்டிக்கப்படுகிறான். கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறிக்கிறான் கொள்ளைக்காரன். அவனுக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. இப்படித் தவறான வழிகளில் பிறர் பொருளை அபகரிப்பவர்கள் எல்லோருமே தண்டிக்கப்படும் நிலையில்.....

மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணித்து, சிறு சிறு சலுகைகளால்  ஈர்த்து, அவர்களின் சேமிப்பைக் களவாடும் வணிகர்கள் மட்டும் ஒறுத்தலுக்கு உள்ளாவதில்லையே, ஏன்? ஏன்? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------