சனி, 6 ஜூலை, 2024

‘சாமியார்களின் காலடி மண்’... பக்தர்களின் சாவைத் தவிர்க்க ஆகச் சிறந்த வழி!!!

த்தரப்பிரதேசச் சாமியார் ‘போலோ பாபா’ வின் மதப் பிரச்சாரக் கூட்டம் முடிந்து, பாபாவின் காலடி மண்ணைத் தொட்டு நெற்றியில் பூசிக்கொள்ளும் முயற்சியில் 121 பேர் செத்துப்போனார்கள் என்பது அண்மைச் செய்தி.

121 பேரின் மரணம் நாடெங்கும் பெரும் அதிர்வலையைத் தோற்றுவித்துள்ளது.

அது அதிர்ச்சி தரும் நிகழ்வுதான் என்றாலும், சாமிகளின் காலடி மண்ணைத் தொட்டுப் புண்ணியம் சேர்ப்பதற்காகத் தங்களின் உயிர்களை அவர்கள்[121 பக்திமான்கள்] பணயம் வைத்தார்கள் என்பதால், அது குறித்து வருந்துவது தேவையற்றது.

இந்த நிகழ்ச்சி மூலம், சாமியார்களின் காலடி மண் எத்தனைப் புனிதமானது என்பதை இந்நாட்டு மக்களனைவரும் புரிந்துகொண்டுள்ளார்கள்.

அதன் விளைவு, இனி, போலோ பாபாவைப் போன்ற, கடவுளுக்கு இணையான சாமியார்களின் மதப் பரப்புரைக் கூட்டம் எங்கு நடந்தாலும், பக்தர்கள் லட்சக்கணக்கில் அங்கு கூடுவதும், சாமியார்களின் ‘பாத கமலம்’ பட்ட மண்ணுக்காகத் தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதும் நிகழும் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.

போராட்டம் காரணமாக, நூற்றுக்கணக்கில்[எண்ணிக்கை ஆயிரக்கணக்கிலும் இருக்கலாம்] உயிர்ப்பலி நேரலாம் என்பதால், அந்த அசம்பாவிதத்தைத் தவிர்க்க, நம் மதிப்பிற்குரிய பக்திமான் பிரதமர் மோடி அவர்களிடம் பணிவுடன் நாம் முன்வைக்கும் பரிந்துரை பின்வருமாறு:

மதப் பிரச்சாரம் செய்யவிருக்கும் சாமியார்களின் திருப்பாதங்கள் பட்ட மண்ணை[டன் கணக்கில்] முன்கூட்டியே சேகரித்துவைத்து, கூட்டம் நடைபெறும் நாளில்  அரங்கில் பல இடங்களில், தனித் தனிக் குழுக்கள் மூலம், சம்பந்தப்பட்ட சாமியாரின் திருவடி பதிந்த மண்ணை இலவசமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.

இதற்காக அமைக்கப்படும் குழுக்களுக்கு முன்கூட்டியே அரசு ஆலோசனைகள் வழங்குவது பெரிதும் வரவேற்கத்தக்கது.