ஞாயிறு, 14 ஜூலை, 2024

ஒரு குணம்... ஒரு மனிதன்... ஒரு கடவுள்

‘கருணை’ என்பது குணம். மனிதருக்குள்ள நல்ல  குணங்களில் இதுவும் ஒன்று.

இதன் இயல்பு பிறருக்கு உதவத் தூண்டுவது.

இந்த ஒரு குணத்தை மட்டுமே கொண்டுள்ள மனிதர் எவருமில்லை.

கடவுள் கருணை உள்ளவர் என்கிறார்கள். 

மனிதர்களில் கருணை என்னும் ஒரு குணம் மட்டுமே கொண்டவர் இல்லை என்பது போல்[மனிதருடன் கடவுளை ஒப்பிடுவதே தவறு என்பார்கள். அப்படிச் சொல்லிச் சொல்லித்தான் கடவுள் சார்ந்த மூடநம்பிக்கைகளை வளர்த்துவிட்டார்கள்] கடவுளும் கருணை என்னும் ஒரு குணம் மட்டுமே கொண்டவரல்ல; நல்ல குணங்களுடன், காழ்ப்பு, சினம், சூதுவாது, பொறாமை, வஞ்சகம் என்று வேறு பல கெட்ட குணங்களையும் கொண்டவராகத்தான் இருக்க முடியும் என்று நாம் அனுமானித்தால் அதில் தவறேதும் இல்லை.

அதாவது.....

மனிதரோ கடவுளோ ‘ஒரே ஒரு குணம் மட்டுமே கொண்டவராக இருப்பது சாத்தியமே அல்ல[என்றிப்படிச் சொல்வதெல்லாம் அற்ப மனிதருக்கு ஏலாதவை என்றால், கடவுள் உண்டு என்று சொன்னவர்களும் அற்ப மனிதர்கள்தான் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது].

உண்மை இதுவாக இருக்க, கடவுள் கருணைக் குணம் மட்டுமே கொண்டவர் என்பதாக மக்களை நம்பச் செய்து, அவரை வழிபட்டால் எந்தத் தீங்கும் விளையாது; நன்மையே விளையும் என்று எப்படிச் சொன்னார்கள்?

எப்படிச் சொன்னார்களோ, இந்த மூடநம்பிக்கை மனித மனங்களில் அகற்றவே இயலாத வகையில் அழுத்தமாகப் பதிந்துகிடக்கிறது!