அழைப்பு மணி ‘கிர்ர்ர்ர்ர்’ரியது.
கதவைத் திறந்தார் மாரிமுத்து.
“வெளியே வீடு வாடகைக்கு விடப்படும்கிற பலகை பார்த்தேன்” என்றார் அழைப்பு மணி அடித்த பெரியசாமி.
அவரிடம், “உங்க சாதி என்ன?” என்றார் மாரிமுத்து.
அதிர்ச்சிக்குள்ளானார் பெரியசாமி. “எதுக்குச் சாதி கேட்குறீங்க?”
“தப்பா நினைக்காதீங்க. மேல் சாதிக்காரங்க தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்களுக்கு வீடு வாடகைக்கு விடுறதில்ல. நாங்க தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்க. உழைச்சிச் சம்பாதிச்ச வருமானத்தில் கட்டிய இரண்டு வீட்டில் ஒன்றைச் சாதி வித்தியாசம் பார்க்காம வாடகைக்கு விடுறோம். இங்கே குடிவர நீங்க விரும்புவீங்களான்னு…..”
மாரிமுத்து சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, “நாங்க சாதி பார்க்குறதில்ல. வாடகை எவ்வளவுன்னு சொல்லுங்க” என்றார் பெரியசாமி.
சொன்னார் வீட்டுக்காரர்.
ஒரு மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்துவிட்டு வீடு திரும்பித் தன் மனைவியிடம் விவரம் சொன்னார் பெரியசாமி.
“தீட்டுப்பட்ட வீட்டுக்கா நாம் குடிபோவது?” என்று அங்கலாய்த்தார் அவர் மனைவி.
அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் பெரியசாமி:
“ஐயர்களை வைத்துச் சிக்கனமா ஒரு யாகம் பண்ணிட்டா தீட்டு நீங்கிடும்.”