செவ்வாய், 16 ஜூலை, 2024

'நிலா’வில் ஒரு குகை! குகையில் நம் பிரதமர் தியானம்!! எப்போது?

‘அண்மைக் காலங்களில் ‘நிலா’ குறித்து நாசா விஞ்ஞானிகள் தீவிர ஆய்வை மேற்கொண்டார்கள்.

அதன் பயனாக அவர்கள், நிலாவில் ஒரு குகை இருப்பதையும், அந்தக் குகைக்குச் செல்வதற்கான வழி[குழி] நிலாவின் மேற்பரப்பில் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது செய்தி[https://tamil.oneindia.com].
நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரின் ரேடார் அளவீடுகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அதைப் பூமியில் உள்ள எரிமலைக் குழாய்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள்[இந்த ஆய்வு குறித்த முடிவுகள் நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது].

நிலாவில் பொதுவாகவே மிக மோசமான தட்பவெப்ப நிலை இருக்கும். வரும் காலத்தில் அங்கே நீண்ட காலம் தங்கி மனிதர்கள் ஆய்வு செய்யும்போது, அங்குள்ள மோசமான வானிலையிலிருந்து விண்வெளி வீரர்கள் தப்பிக்க இந்தக் குகை பெரியளவில் உதவும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.


நிலாவில் நிரந்தரமாகத் தங்கி ஆய்வு செய்வதற்காக, ஆய்வகம் ஒன்றை அமைப்பது குறித்தும் நாசா ஆலோசித்து வருகிறதாம்.


இது விசயத்தில். சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் ஆய்வாளர்களும் அங்கு ஆய்வு மையத்தை உருவாக்க ஆர்வம் காட்டிவருகிறார்கள்.


நாசா விஞ்ஞானிகளோடு ஒப்பிட்டால், நம் விஞ்ஞானிகள் எவ்விதத்திலும் அறிவாற்றலில் குறைந்தவர்கள் அல்ல என்பதால், குகையைக் கண்டுபிடிப்பதற்கு, இவர்களை ஊக்குவிப்பதோடு ஆக்கபூர்வமான அத்தனை வசதிகளையும் இவர்களுக்குச் செய்துதருதல் வேண்டும் இந்திய அரசு.


செய்தால்…..


பிற நாட்டவரை முந்திக்கொண்டு நம் விண்வெளி வீரர்கள் நிலாக் குகையைச் சென்றடைவதோடு, அங்கு நம் தேசியக் கொடியை நட்டு, குகை இந்தியாவுக்கே சொந்தம் என்று உலகோர்க்கு அறிவிப்பார்கள்.


அடுத்த கட்டமாக, நம் விண்வெளி வீரர்களுடன் மதிப்பிற்குரிய நம் பிரதமர் மோடி அவர்கள் அங்கு செல்லுதல் வேண்டும்.


சென்று, நிலாவில் உள்ள அந்த மலைக் குகையில் நேரம் போவது தெரியாமல் கண் மூடித் தியானத்தில் ஈடுபடுதல் வேண்டும் என்பது நம் விருப்பம். இந்த மண்ணின் மைந்தர்கள் விருப்பமும் அதுவே.


தியானத்தின் பயன்.....


இந்தியா மிகக் குறுகிய கால அவகாசத்தில் உலகின் வளர்ச்சி பெற்ற நாடுகளில் முதலிடத்தைப் பெறும்.


இது விசயத்தில், மோடி அவர்களை இந்த நம் புண்ணியப் பூமிக்கு அனுப்பிவைத்த எல்லாம் வல்ல அந்த முழு முதல் கடவுள் அருள்புரிவார் என்பது உறுதி!


             *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/washington/cave-found-on-moon-could-shelter-humans-in-future-622037.html