திங்கள், 29 ஜூலை, 2024

பிரதமர் மோடியின் மூன்று அவதாரங்கள்!!!

கீழ்க்காணும் வெகு சுவையானதொரு கட்டுரையைத் தற்செயலாக https://tamil.oneindia.comஇல் வாசிக்க நேர்ந்தது. மிகவும் பிடித்திருந்ததால் இங்கே பகிர்கிறேன்.

கட்டுரை ஆசிரியர் மோடியைப் புகழ்கிறாரா, எள்ளி நகையாடுகிறாரா என்பது பற்றிப் புரிந்துகொள்ள இயலவில்லை[அடியேன் யாதொன்றும் அறியேன் பராபரமே!]. உங்களுக்கு அது சாத்தியம் ஆகலாம்.

நாம் என்ன செய்தாலும் நம்மைப் பற்றி மக்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் அரசியல் தலைவர்கள் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள். பிரதமர் நரேந்திர மோடி இது விசயத்தில் அளவிறந்த பேரார்வம் கொண்டவர். மக்களைத் தனது செயல்களால் அதிகம் ஈர்க்கக்கூடியவரான இவர் தன்னைப் பற்றியே எப்போதும் நினைக்கவும் பேசவும் வைப்பார்.

1.டீ மாஸ்டர்: டீ விற்பனையாளர் பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் தன் தந்தையின் டீக்கடையில் பணியாற்றியபோது, குஜராத் மாநிலம் வத்நகர் ரயில் நிலையத்தில் தான் டீ விற்றதாக 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூறினார். 

இதனைக் கேட்ட மக்கள், பிரதமர் மோடி டீ விற்றுப் பிரதமர் ஆனவரா என உள்ளம் நெகிழ்ந்தார்கள். பிரதமர் மோடி டீக்கடை வைத்துப் பெரிய தலைவராக உயர்ந்தவர் என்பதை விளம்பரப்படுத்தும் வகையில் அப்போது நமோ டீக்கடைகள் நாடு முழுவதும் பாஜகவினரால் திறக்கப்பட்டன. பல டீக்கடைகளுக்கு நமோ டீக்கடை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

டீக்கடைக்கார்கள் பலரும், ‘பாரப்பா நம்மள மாதிரி ஒருத்தர்தான் பிரதமர் ஆயிருக்காரு’ என உள்ளம் மகிழ்ந்தார்கள். இதனால், பிரதமர் மோடி கடந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் பிரதமராகப் பொறுப்பேற்றார். 

2.ஏழைத் தாயின் தவப் புதல்வன்: ஏழையான பிரதமர் நரேந்திர மோடி எத்தனைதான் எதிர்க்கட்சிகள் ஏகவசனத்தில் திட்டித் தன்னைக் காயப்படுத்தினாலும், தன்னை ஏழைத் தாயின் மகன் என்று உருகினார். ஏழைத் தாயின் மகன் பிரதமர் ஆனதைச் சிலரால் ஏற்க முடியவில்லை என்று மோடி கூறியதை நாம் அறிவோம்; மக்கள் அறிவார்கள்.

3.காவலாளி மோடி: இப்போது மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில்[தேர்தலுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை இது], பிரதமர் நரேந்திர மோடி திடீரென, தன் பெயருக்கு முன்னால் ‘சௌகிதார் மோடி’ என்று சேர்த்துக்கொண்டார். அதாவது இன்று முதல் நான் மக்களின் பாதுகாவலன்/காவல்காரன்” என்று கூறிக்கொண்டார். 

இதனைப் பார்த்து, பாஜகவினர் மோடியைப் போல் சௌகிதார் என்ற பெயரை டுவிட்டரில் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

*பலே மோடி: இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு மோடி பல ஆயிரம் காவலாளிகளுடன் பேசி, அவர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

மக்களுக்காக என்ன சாதனைகள் செய்தார் என்பதைத் தாண்டி, மக்களைக் கவர என்ன செய்தார் என்பதை வெளிகாட்டுவதில்தான் மோடியின் வெற்றி அடங்கி இருக்கிறது. 

*பயணங்கள்... பயணங்கள்: பிரதமர் மோடி எப்போதும் சும்மா இருந்தது இல்லை. வெளிநாட்டுப் பயணங்களோ, உள்நாட்டுப் பயணங்களோ இல்லாமல் போனால் யாரோ ஒரு ஏழைத்தாயின் மகன் தனக்கு அனுப்பிய கடிதத்தை ரேடியோவில் /டி.வி.யில் வாசிப்பார். இதன் மூலம் மக்களிடம் தன்னைக் கொண்டுசேர்ப்பார். 

இதேபோல் ஏழைகளுக்குக் கேஸ் சிலிண்டர் வழங்கும்போதெல்லாம் அவர்களுடன் கலந்துரையாடுவார்; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஏழைகளைத் தேடிச்சென்று பேசுவார். 

ஒட்டுமொத்ததில், பிரதமர் மோடி ஏழை மக்களைக் கவருவதற்காக எதையாவது செய்துகொண்டுதான் இருப்பார். இதுதான் மோடியின் சாமர்த்தியம்.

* * * * *

 https://tamil.oneindia.com/news/delhi/tea-master-chowkidar-pm-modi-s-election-campaign-tricks/articlecontent-pf361678-344559.html