வியாழன், 18 ஜூலை, 2024

நாத்திகர் ‘டொனால்டு டிரம்ப்’பும் காக்கும் நம் கடவுள் காளிதேவியும்!!!

#டொனால்டு டிரம்பைச் சுற்றியிருக்கும் தீய சக்தியை விரட்ட டெல்லியில் சிறப்புக் காளி பூஜை நடத்தப்பட்டது# -இது நேற்றையச் செய்தி.

மூர்த்தியானந்த் சரஸ்வதி என்னும் சாமியார், தன் சக இந்துச் சாமியார்களுடன், முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் ‘டிரம்ப்’இன் புகைப்படங்களை வைத்து, அவற்றிற்குச் சந்தனம், பழம் போன்ற பூஜைப் பொருள்களும் வைத்துப் பூஜை[+ஹோமம்] செய்திருக்கிறார்.

டிரம்பின் மீதான தாக்குதலின் பின்னணியில் ஏராள தீய சக்திகள் இருப்பதால், அவற்றை அழித்தொழிப்பதற்காக இதைச் செய்ததாகச் சாமியார் தெரிவித்துள்ளார்.

இந்தச் சாமியாருக்கு, நாம் சொல்லும் புத்திமதி [பிரபல ஊடகங்கள் இதைப் பரபரப்புச் செய்தியாக வெளியிடும் என்பது நம் நம்பிக்கை..... ஹி...ஹி... ஹி!!!] என்னவென்றால்.....

"டிரம்ப் பெற்றோர் கிறித்தவராக இருந்தாலும், எப்போதுமே டிரம்ப் தன்னை ஒரு கிறித்தவராகக் காட்டிகொண்டதில்லை. தன் மீது மட்டுமே அளவிறந்த நம்பிக்கை கொண்ட அவர் ஒரு நாத்திகர்[கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர்] என்றே பலரும் கருதுகிறார்கள்[ஏராளமான ஆதாரங்கள் உள்ளன].

கடவுள் நம்பிக்கையற்ற அவரின் பாதுகாப்புக்கு நீர் நம்புகிற காளி மூளிகளையெல்லாம் கும்பிட்டு யாகம் செய்தது மிகவும் கிறுக்குத்தனமான செயல்.

டொனால்டு டிரம்ப் அமெரிக்கர். பெரும்பாலான அமெரிக்கர்[கிறித்தவர்]களுக்கென்று ஒரு கடவுள் இருக்கிறார். அவர் ‘கர்த்தர்’ ஆவார்.

அமெரிக்கரான டிரம்பைப் பாதுகாக்க அமெரிக்கக் கடவுளான கர்த்தர் இருக்கும்போது, உங்களின் இந்திய இந்துக் கடவுளான காளியை முன்வைத்துப் பூஜை செய்வது சரியா[அவர்கள் உம் மீது கோபம் கொண்டு வழக்குத் தொடுக்கவும்கூடும்] என்று நீர் யோசிக்கவில்லை.

பூஜை, யாகம், ஹோமம் எல்லாம் செய்து பிழைப்பு நடத்துவது சரியாக இருக்கலாம்; ஒரு நாத்திகரின் பாதுகாப்புக்காக இவற்றைச் செய்து உலக அளவில் பிரபலம் ஆக நினைப்பது சரியல்ல.

ஏதோவொரு காரணத்தைச் சொல்லி, அவ்வப்போது இதுகளைச் செய்வதை உம்மால் தவிர்க்கவே இயலாது என்றால்.....

பக்திமான்கள் வேடம் தரித்த பல தீயச் சக்திகள் இந்த நாட்டில் உலாவிக்கொண்டிருக்கின்றன. இந்தத் தீயச் சக்திகளை விரட்டியடிக்க, அல்லது அழித்தொழிக்க நீர் காளி, மாகாளி, பத்ரக்காளி, உருத்திரக்காளி என்று ஒட்டுமொத்தக் காளிகளுக்கும் பூஜை செய்யலாம்.

செய்தால்.....

பலன் கிடைக்கிறதோ இல்லையோ, உம்முடைய இந்தச் செயலை நாம் மனதார வரவேற்போம்."