எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 24 ஜூலை, 2024

‘அஞ்சா நெஞ்சர்’ மோடி! ‘இந்தியா கூட்டணி’க்கு எச்சரிக்கை!!

மக்கள் வாக்களித்து ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படும் நாடு எதுவாயினும், நாட்டை ஆளுபவர்கள், தமக்கு வாக்களிக்காதவர்களை இனங்கண்டு அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்தவொரு நிதியுதவியும் செய்யாமல் புறக்கணிக்கும்/பழிவாங்கும் அநியாயம் அங்கெல்லாம் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

விதிவிலக்கு.....

இந்தியா.

‘இந்தியா கூட்டணி’ ஆளும் மாநிலங்களைப் புறக்கணித்து, தனிப் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழாமலிருக்க முட்டுக் கொடுக்கும் பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு அளவிறந்த நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்[மோடியின்  ‘நிதிநிலை அறிக்கை>பட்ஜெட், 2024] இந்த நாட்டின் பிரதமர் மோடி; தேவைப்பட்டால் மேலும் மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை அறிவிப்பார்.

ஒரு பெரிய நாட்டை ஆளுகிற மோடி, செய்யக்கூடாத இந்தக் கீழ்த்தரமான செயலுக்காக ஒட்டுமொத்த உலகமும் தன்னைப் பழிக்கும் என்றோ, புறக்கணிக்கப்பட்ட மாநில மக்கள் பெரிதும் வருந்துவார்கள் என்றோ எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.

இவரின் தகாத செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்களின் கண்டனம் இவரின் கால் தூசுக்குச் சமானம்.

களம் இறங்கி, மக்களோடு இணைந்து அவர்கள் போராடினாலும் அவர்களால் புடுங்க முடியாது, ஓர் ஆணிகூட, அடக்கி ஒடுக்க ஆயுதம் ஏந்திய படை வீரர்கள் இருப்பதால்.

இவர் நினைத்தால் எதுவும் செய்யலாம்.

ஒரு சர்வாதிகாரியாக ஆகும் ஆசை மோடிக்கு எப்போதுமே உண்டு. இப்போதே ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியாக இருக்கும் இவர் இன்னும் சில ஆண்டுகளில் முழுச் சர்வாதிகாரியாக ஆகும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, இந்தியக் கூட்டணிக்காரர்களுக்கு நாம் செய்யும் எச்சரிக்கை.....

மோடி அஞ்சா நெஞ்சர்; அசாதரணமான மனிதர்! அவரை எதிர்த்துப் போடராடுவது சில சுண்டெலிகள் சேர்ந்து ஒரு பெரிய மலையை அடியோடு பெயர்த்துச் சாய்க்க முயல்வது போன்றது!!