//உ.பி ஹத்ராஸில் சாமியார் பிரசங்க நிகழ்ச்சியில் பயங்கரக் கூட்ட நெரிசல். பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு! Tuesday, July 2, 2024, 19:28 [IST]
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்ச்சியின்போது, கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 40 பேர் பெண்கள். கூட்ட நெரிசலில் சிக்கிய மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உ.பி. சாமியார் பிரசங்க நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.[https://tamil.oneindia.com/news/lucknow/40-people-died-in-stampede-at-religious-gathering-in-up-hathras-618675.html]//
போதையை அதிகரித்து, குடிகாரனின் உயிரைப் பலிவாங்கும் கள்ளச்சாராய வியாபாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது; தண்டனையும் வழங்கப்படுகிறது.
கள்ளச்சாராயம் தரும் போதையைக் காட்டிலும் மிகப் பல மடங்கு போதை ஊட்டுவது பக்தி.
பக்தி வளர்த்தால் துன்பங்கள் தீரும்; நினைத்த காரியம் கைகூடும்; செத்தால் சொர்க்கம் நிச்சயம்; மறுபிறவியில் நாயாகவோ, சாக்கடைப் பன்றியாகவோ, பொதி சுமக்கும் கழுதையாகவோ பிறக்காமல், மனிதனாகவே பிறந்து புண்ணியம் சேர்த்து இறைவனின் திருவடியில் நிரந்தரமாய்த் தங்கிப் பேரானந்தத்தில் மிதக்கலாம் என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து மக்கள் மனங்களில் போதை ஏற்றிப் பகுத்தறிவைப் பாழடிக்கும் காவிகளுக்கு[+மதபோதகர்கள்]த் தண்டனையே இல்லை.
மாறாக, அவதாரங்கள் என்றும், மகான்கள் என்றும் போற்றப்படுகிறார்கள்.
மேற்கண்ட செய்தியில் இடம்பெற்றுள்ள காவிச் சாமியார் ஏற்றிய பக்திப் போதையால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்[மனக் கட்டுப்பாட்டை இழந்து நெரிசலில் சிக்கிச் செத்திருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது செய்தி].
சாராய வியாபாரிகளுக்குத் தரப்படும் தண்டனையைவிடவும் கடுமையான தண்டனை பெற வேண்டியவர்கள் இவர்கள். அவசியம் எனின், மக்களின் பகுத்தறிவை நாசமாக்குவதோடு நூற்றுக்கணக்கில் அவர்களின் உயிர்களைக் கற்பனைக் கடவுள்களுக்குக் காவு கொடுக்கிற இவர்களுக்கு மரண தண்டனையே வழங்கலாம்.
சாமி கும்பிடவும் தியானங்கள் செய்யவும் கற்றுக்கொடுப்பதைத் தவிர, தலைவனுக்குரிய வேறு தகுதி ஏதும் பெற்றிராதவர்கள் ஆட்சிபீடத்தில் இருக்கும்வரை இதெல்லாம் வெறும் பகற்கனவு மட்டுமே!