பேருந்து நிலையம்.
ஒரு நகரப் பேருந்தில் ஏறுவதற்கு ஆண்களும் பெண்களும் நெருக்கியடித்து, முட்டி மோதித் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டிருந்தார்கள்.
எதிர்பாராதவிதமாக, அத்தனைப் பேரும் விலகி நின்று வேடிக்கை பார்க்க, 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரின் சட்டையைக் கொத்தாகப் பற்றி இழுத்து, கன்னங்களில் அறைந்து, வயிற்றிலும் நெஞ்சிலும் மாறி மாறிக் குத்திக்கொண்டிருந்தார் நடுத்தர வயதுக்காரர் ஒருவர்.
“என்ன நடந்தது என்று எவரும் கேட்காமலே, “வயசுப் பொண்ணு நெஞ்சில் இந்தக் கிழவன் கை வெச்சுட்டான்” என்று சொல்லி முடிப்பதற்கு முன்பே மேலும் இரண்டு பேர் தங்கள் பங்குக்கு முதியவரை எட்டி உதைத்தார்கள்; நெட்டித் தள்ளினார்கள்.
சுதாரிக்க முடியாத முதியவர் தரையில் சரிந்தார்.
எவரும் குறுக்கிடாத நிலையில், நான் அவரைத் தூக்கி உட்கார வைத்து, “தப்புக்குத் தண்டனை கொடுத்துட்டீங்க. தயவுசெய்து இனி யாரும் பெரியவர் மேல கை வைக்காதீங்க” என்றேன்.
தாக்குதல் நடத்தியவர்கள் உட்படக் கூட்டம் சற்று விலகியே நின்று வேடிக்கை பார்க்க, பெரியவரைக் கைத்தாங்கலாகச் சற்றுத் தொலைவிலிருந்த என் காருக்கு அழைத்துப்போனேன்.
காரை நகர்த்தினேன்.
பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறியதும் “எங்கே போகணும்னு சொல்லுங்க” என்றேன்.
“இந்தப் புத்தி கெட்டவன் வீட்டுக்கு நீங்க வரவேண்டாம். நான் சொல்லுற இடத்தில் நிறுத்துங்க. இறங்கி நடந்து போயிடுறேன்” என்றார் பெரியவர் மிகவும் வருத்தம் தோய்ந்த குரலில். அவர் சொன்ன இடத்தைச் சென்றடைய ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகலாம் என்பதால் காரின் வேகத்தைக் கொஞ்சம் அதிகரித்தேன்.
பெரியவரை சற்று நேரம் உற்றுநோக்கிய பிறகு.....
குனிந்த தலையுடன் அமர்ந்திருந்த அவரிடம், “விருப்பம் இருந்தா சொல்லுங்க, அந்தப் பொண்ணு மேல ஏன் கை வைச்சீங்க?” என்றேன்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு பேச ஆரம்பித்தார் அவர். “ரொம்பக் கட்டுப்பாட்டோடு வளர்ந்தவன் நான். மனசளவில் மத்தப் பொண்ணுக மேல ஆசைப்பட்டிருக்கிறேனே தவிரக் கல்யாணம் ஆகிறவரைக்கும் அது விசயத்தில் நான் தப்புப் பண்ணினதே இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் அந்தக் கட்டுப்பாடு உடைஞ்சி சிதற ஆரம்பிச்சது.....”
சற்று நேரம் தாமதித்துத் தொடர்ந்தார் அவர். “அடி உதையோடு போலீஸ் கேஸ் அது இதுன்னு அவமானப்பட வேண்டிய எனக்குப் பாதுகாப்புத் தந்த நல்ல மனசுக்காரர் என்ற வகையில், உங்ககிட்டே ஒரு உண்மையை ஒளிக்காம சொல்லுறேன். அது வந்து.....”
“தயங்காம சொல்லுங்க.” -நான்.
“பொண்ணு அழகானவளோ இல்லையோ, அவள் மார்பகம் கட்டுக்குலையாம இருந்தா அதை ரொம்பவே ரசிப்பேன். எனக்கு மனைவியாக வர்றவகிட்டேயும் அதை எதிர்பார்த்தேன். தரகர் மூலமா நான் கட்டிகிட்ட அவள் கல்யாணத்துக்கு முன்பே அது விசயத்தில் ரொம்ப அடிபட்டவளோ என்னவோ, நான் எதிர்பார்த்தது அவகிட்ட இல்ல. அந்தரங்க உறவிலும் ஈடுபாடு இல்ல.....”
“அடிக்கடி எங்களுக்குள்ள தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் விவாகரத்துச் செய்துகிட்டோம். இன்னொரு கல்யாணத்தில் விருப்பம் இல்ல. ஆனால், அப்புறமும் நான் ஒழுக்கம் உள்ளவனாகத்தான் இருந்தேன். அழகான பெண்களை, குறிப்பா அது எடுப்பா இருந்தா என்னை மறந்து ரசிப்பதை மட்டும் நிறுத்தல.....
“கொஞ்சம் முன்னாடி, பஸ்ஸில் ஏறினப்போ அந்த இளம் வயசுப் பொண்ணோட கட்டுக் குலையாத மார்பில் தற்செயலாத்தான் என் கை பட்டுது. தள்ளுமுள்ளுவில் அப்புறமும் இரண்டு தடவை பட்டதில் ரொம்பவே சந்தோசத்தை அனுபவிச்சேன். அவள் கண்டுக்காம இருந்ததால மறுபடியும் பிடிச்சிப் பார்க்கணும்கிற ரொம்பத் தப்பான ஆசையால் ஒரு பக்க மார்பகத்தை முழுசாக் கையில் பிடிச்சிட்டேன். அப்போதுதான் அவளுக்குச் சொரணை வந்திருக்கணும். “ஏய் கிழவா”ன்னு சத்தம் போட்டுட்டா. அப்புறம் நடந்ததைத்தான் நீங்களே பார்த்துட்டீங்க..... மனக் கட்டுப்பாட்டோடுதான் வாழ்ந்திட்டிருந்தேன். எதிர்பாராம வழுக்கி விழுந்துட்டேன். இனியும் உயிரோடு இருக்கணுமான்னு தோணுது.”
அவர் பேசி முடித்தபோது அவர் கண்களில் கண்ணீர் வழிவதைப் பார்த்தேன். “சம்பந்தப்பட்ட பொண்ணுக்கோ, மத்தவங்களுக்கோ உங்களை யாருன்னு தெரியாது. சொந்தபந்தங்களுக்கும் தெரிய வாய்ப்பே இல்ல. இயற்கையான மரணம் வர்றவரைக்கும் நாட்டு நடப்பை வேடிக்கை பார்த்தாவது கழிக்கலாம். அது வரும்போது வரட்டும். அதைத் தேடி நாம் போக வேண்டாம். ஏன்னா, இனியொரு முறை நாம் பிறக்கப்போவதில்லை” என்று சொல்லிப் பெரியவரைக் கவனித்தேன்.
“சரி” என்பது போல் மெல்லத் தலையசைத்தார் அவர்.
* * * * *பொழுதுபோக்காக, கொஞ்சம் மலையாள மொழிச் சிறுகதைகளை[short stories in malayalam] கூகுளார் தயவில் மொழியாக்கம் செய்து வாசித்ததில், மேற்கண்ட கதை பிடித்திருந்தது. அதை நம் மொழி மரபுக்கேற்ப, எனக்குப் பழக்கமான நடையில் வடிவமைத்துள்ளேன்.
மலையாள எழுத்தாளர்கள் துணிச்சல் மிக்கவர்கள்!