ஞாயிறு, 7 ஜூலை, 2024

என் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர்!!!

மானிடரே! ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம்னா அவுங்க கழுத்து நிறையக் கமகமன்னு மணம் வீசுற பூ மாலை போடுறீங்க.

தப்போ சரியோ இரண்டு கிளுகிளுப் பருவத்து இளசுகளைச் இணைக்கிற நல்ல காரியம் அது என்பதால் அனுமதிக்கலாம்.

அதே மாலையை, நல்லவை அல்லாத, அல்லது கெட்ட கெட்டக் காரியங்களுக்கும் பயன்படுத்துறீங்க.

கும்பிடப் போகிற சாமிகளுக்கு மாலை[சாமிகள் நுகர்ந்து இன்புறுமா?!]; பொல்லாத சாமியார்களுக்கு மாலை.

அரசியல் கூட்டம்னா, மேடை ஏறி, உங்கள் கட்சித் தலைவனுக்கு வரிசைகட்டி நின்று மல்லிகை, ரோஜா, கதம்பம்னு விதம் விதமா மாலை போட்டு அவனைத் தாஜா பண்ணுறீங்க.

புது வீடு கட்டினா வாசல்படியில் ஆளுயற மாலை கட்டி அலப்பறை செய்யுறீங்க. செத்துப்போனவனின் சடலத்துக்கு ஆளாளுக்கு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப் போறீங்க.
ஆக,

வெறும் கல்லிலும் உலோகங்களிலும், களிமண்ணிலும் ஆன கடவுள்களுக்கும், போலிச் சாமியார்களுக்கும், மனதில் கசடு நிறைந்த கட்சித் தலைவர்களுக்கும்[+சாதி, மதம் போன்ற இன்ன பிற குழுத் தலைவர்கள் > பெரும்பாலும்], சவங்களுக்கும் போட்டு வீணடிக்கிற மலர் மாலைகளுக்காக ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவு செய்யுறீங்க.

கொஞ்சம் சிந்தித்தாலே இது எத்தனை  அறிவீனம் என்பது புரியும்.

இனியேனும்,

இந்த மூடத்தனத்திலிருந்து விடுபட்டு, இம்மாதிரியான தப்பான வழிகளில் பணத்தை வீணடிப்பதைத் தவிர்ப்பதோடு, அதை நிராதரவாய்த் தெருக்களில் திரியும், கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வழி இல்லாத ஏழைப் பிச்சைக்காரர்களுக்குக் கொடுங்கள்.

அவர்கள் நெஞ்சார உங்களை வாழ்த்துவார்கள். ‘பாவம் புண்ணியம்’ என்பதெல்லாம் உண்மையானால் உங்களுக்கு நிறையவே புண்ணியம் சேரும்.

அப்படி எதுவும் இல்லையென்றால்.....

நீங்கள் செய்யும் உதவியால் மனம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி வழியும்!