செவ்வாய், 17 செப்டம்பர், 2024

மோடிஜி, அதென்ன கணக்குங்க ‘ஆயிரம் ஆண்டு’!?

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற 4-ஆவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து, தன் ஆட்சிக்காலச் சாதனைகளைப் பட்டியலிட்ட மோடி, இன்றைய இந்தியா இன்றைக்கு மட்டும் அல்ல, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

‘இந்தியா ..... அடித்தளம் இடுகிறது’ என்பதை, ‘மோடிஜி அடித்தளம் இடுகிறார்’ என்று திருத்திக்கொள்ளுங்கள்.

தீராத நோய்கள், வறுமை, கொலை, கொள்ளை, வன்புணர்வு[இந்தியா ஒரு பெண்ணாக இருப்பதற்கான[வாழ்வதற்கான] மோசமான இடமாக மதிப்பிடப்பட்டுள்ளது. https://www.haqcrc.org/news/truth-about-indias-gendercide/போன்றவற்றால் ஆண்டுதோறும் உயிரிழப்போர் எண்ணிக்கை பல்லாயிரம்; பல லட்சங்கள் என்றும் சொல்லலாம்.

இந்த அவல நிலையை மாற்றியமைக்கவே இன்னும் மிகப் பல ஆண்டுகள் தேவை.

இதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்தோ, தேவைப்படும் கால அவகாசம் குறித்தோ மோடி பேசியிருந்தால் அவரை நாட்டு நலனில் அக்கறை கொண்ட நல்ல பிரதமர் என்று பாராட்டலாம்.

அதை விடுத்து, 2047இல் இந்தியா வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும்[15 ஆக., 2023] என்பது போல வாய்போன போக்கில் அடித்துவிடுவதை வழக்கமாகக்கொண்ட இவர், இப்போது, அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளம்[இந்தியா வளர] இடுவோம் என்று பேசியிருக்கிறார்.

இவருக்கு முன்பு, இந்த நாட்டை ஆண்ட நம் தலைவர்களெல்லாம் அடித்தளம்(வளர்ச்சிக்கான திட்டங்கள்?)    அமைக்கவில்லையா?

இல்லை என்றே கொண்டாலும். ஏற்கனவே 10 ஆண்டுகள் இவர் பிரதமராக இருந்தபோது அடித்தளம் போடுவது பற்றி வாய் திறவாதது ஏன்?

இப்போது திறந்தது மகிழ்ச்சிதான். எனினும், ஒரு சந்தேகம்..... 

50,100 ஆண்டுகளுக்கான அடித்தளம் அமைத்தால் அதுவே பெரிய சாதனை. இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அமைக்கிறாராம். 

அதென்ன கணக்கு ஆயிரம் ஆண்டுகள்?

இன்று ஆயிரம் என்றவர் இன்னும் சிறிது காலம் கழித்து அதைப் பத்தாயிரம், பதினைந்தாயிரம், லட்சம், பத்து லட்சம் என்றும் உயர்த்துவாரோ?

“உலக அளவில், கொஞ்சமும் சிந்திக்காமல் பேசுகிறவர் நம் பிரதமர் மட்டும்தானா?” என்றெழும் கேள்வி நம்மைத் தீராத கவலையில் ஆழ்த்துகிறது!