செவ்வாய், 3 ஜூன், 2025

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளும் கூர் அறிவு கன்னடர்களுக்கு இல்லை!!!

‘தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது’[தெலுங்கு & மலையாளம் உட்பட] என்று கமல்காசன் அவர்கள்  கூறியிருப்பது[இது ஏற்கனவே தமிழ்ப் பற்றாளர்களால் வலியுறுத்தப்பட்டதுதான்] கன்னடர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. 

இது அவரின் ‘கருத்து’ மட்டுமே என்பதைக் கன்னடர்கள் புரிந்துகொள்ளவில்லை.

உரிய முறையில், “தமிழிலிருந்து பிறந்ததல்ல கன்னடம். இதற்கான மூல மொழி வேறு” என்று மறுப்புத் தெரிவிப்பதைச் செய்திருந்தால்[கன்னடத்திலிருந்துதான் தமிழ் பிறந்தது என்றோ, திராவிட மொழிகளுக்கெல்லாம் கன்னடமே மூல மொழி என்றோ சொல்வதற்கும் கன்னடர்களுக்கு உரிமை உண்டு] அவர்களை நனி நாகரிகர்கள் என்று பாராட்டலாம்.

இதற்கு மாறாக, “கமல்காசன் மன்னிப்புக் கேட்காவிட்டால் அவர் நடித்த திரைப்படங்களைக் கர்னாடகாவில் ஓடவிடமாட்டோம்” என்று மார்தட்டுவது அநாகரிகத்தின் உச்சம்; மனிதப் பண்பாடு அற்ற செயல்.

நடிகன் அல்லாத ஓரு பிரபல அரசியல்வாதியோ[கன்னடர்களின் தயவு தேவைப்படாதவர்] புகழ் பெற்றதொரு தமிழ் எழுத்தாளரோ இப்படிப் பேசியிருந்தால் கன்னடச் சகோதரர்களின் கன்னடர்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? தமிழ்நாட்டுக்கு வந்து அவரின் வீட்டைத் தேடிப்போய்த் தாக்குதல் நடத்துவார்களா?

என்ன செய்வார்கள்? என்ன செய்யமுடியும்? 

சமஸ்கிருதத்திலிருந்துதான் கன்னடம் பிறந்தது[+ஏனைய திராவிட மொழிகள்] என்று சொன்னார்களே/சொல்கிறார்களே சமஸ்கிருதப் பிரகிருதிகள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள் இவர்கள்?! 

தமிழர்கள் மீது மட்டுமல்லாமல், அவர்களின் மொழியின் மீதும் ஏன் இத்தனை வெறுப்பு? காழ்ப்புணர்ச்சி?!

நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கும் என்னும் நம்பிக்கையில்தான், கமல்காசன் இந்தப் பிரச்சினை தொடர்பாகக் கர்னாடக நீதிமன்றத்தை அணுகினார். அதுவும் கன்னடர்கள் போலவே கமலுக்கு எதிராகச் செயல்பட்டிருப்பது வருந்தத்தக்கது.

இறுதியாக நாம் சொல்ல விழைவது.....

“கன்னடர்களே, ஒரு கருத்தை அறிவுப்பூர்வமான கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; கருத்துச் சொன்னவரின் பிழைப்புக்கு உலை வைக்காதீர்கள்!”

[நீதி வழங்குவதில் பெரும்பான்மை சிறுபான்மை வேறுபாடு காட்டலாமா?]