புதன், 25 ஜூன், 2025

கடவுள்களைக் கொஞ்ச நாள் தூற்றலாம் வாங்க!!!

பக்தக்கோடிகளே,

மனிதர்களாகிய நமக்கு ஆறறிவு வாய்த்ததால் அதன் மூலம் நாம் பெற்ற நன்மைகளைவிடவும் தீமைகளே அதிகம்.

அந்தத் தீமைகளில் கடவுளைக் கற்பித்து வழிபடுவதும்[இதனால் மூடநம்பிக்கைகள் பல உருவாயின] ஒன்று.

‘ஒன்று’ என்று நம்பப்பட்ட கடவுள் எண்ணிக்கை கர்த்தர், அல்லா[ஹ்], சிவன், விஷ்ணு என்று ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டது[கடவுள் ஒருவரே. அவரை வேறு வேறு பெயர் சூட்டி வழிபடுகிறோம் என்று புளுகவும் தெரிந்திருக்கிறார்கள்].

மனித சமுதாயத்தில், காலங்காலமாய் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பவர்கள் பக்தர்களாகிய நீங்கள்தான், நாட்டை ஆளுகிறவர்கள் பலரும் உங்களை ஆதரித்ததால்/ஆதரிப்பதால்.

பக்தர்களாகிய[மத வேறுபாடு கருதாமல்] உங்களிடம் நாம் கேட்க விரும்புவது.....

இந்நாள்வரை, உங்களின் பக்திப் பரம்பரை கடவுள்களைப் போற்றிப் புகழ்ந்து{எல்லாம் வல்லவர், அவரின்றி அணுவும் அசையாது, எல்லாப் புகழுக்கும் உரியவர்[அல்லா> இஸ்லாம்], எல்லாருக்கும் தந்தை அவரே[கர்த்தர்> கிறிஸ்தவம்]} கோயில்கள் கட்டி, கூட்டு வழிபாடுகள் நிகழ்த்திக் கொண்டாடியதால் இந்நாள்வரை மனித இனம் பெற்றப் பலன்கள் யாவை?

தனிப்பட்டவர் வாழ்க்கையிலாகட்டும்  ஒட்டுமொத்தச் சமுதாயத்திலாகட்டும், வாட்டும் வறுமை குறைந்ததா? மருட்டும் நோய்களின் தாக்கம் அருகியதா? போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, ஆதிக்க வெறி, இன வெறி, போன்றவற்றால் நிகழும் மோதல்களால் விளைந்த சீரழிவுகளின் எண்ணிக்கை சிறிதேனும் சரிந்ததா? போலிச் சாமியார்களின் கொட்டம் அடங்கியதா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை.

இந்தவொரு அவல நிலையில், உங்களுக்கு நாம் அறிவுறுத்த விரும்புவது.....

வழக்கம்போல் கோயிலுக்குச் செல்லுங்கள்.

சென்று, வழக்கம்போல் அவரைப் போற்றிப் புகழாதீர்கள்; மனம்போன போக்கில், “காலங்காலமாய் உன்னை வழிபட்டதால் நானோ இந்த மனித இனமோ பெற்ற நன்மைகள் ஏதுமில்லை. நீ கருணை வடிவான கடவுள்தானா? நீ இருப்பது உண்மைதானா?” என்றெல்லாம் கேளுங்கள்.

நாள் தவறாமல் கேளுங்கள்; தொடர்ந்து கேளுங்கள்.

கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் உங்களின் தூற்றுதலால் திருந்துகிறாரா பார்ப்போம்!