அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 19 ஜனவரி, 2021

எழுத்தாளர் 'சாரு'[நிவேதிதா]வின் 'சரடு'கள்!!!

சாருநிவேதிதா மிகச் சிறந்த எழுத்தாளர். இன்றைய சில முன்னணி எழுத்தாளர்களில் முன்னிலை வகிப்பவர். 

எதைப் பற்றியும் எழுதுகிறார்; எவ்வளவும் எழுதுகிறார். அவ்வளவையும் சலிப்பில்லாமல் படிக்கலாம். ஆனால், அவரிடமுள்ள குறிப்பிடத்தக்கதொரு பலவீனம்.....

தான் எழுதும் கட்டுரைகளில், தவறாமல் 'சரடு'கள் சேர்ப்பது(அதுகளையும்கூட ரசிக்கும்படி எழுதுவது அவரின் தனித் திறமை).

13.01.2021 குமுதம் வார இதழில், அவருடைய கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு நிகழ்வு கீழே.

#தஞ்சாவூர்க் கவிராயர் என்று ஒரு எழுத்தாளர். அவர் வீட்டில் ஒரு வாதநாராயண மரம். அதன் கிளை தங்கள் வீட்டில் வந்து கார், தரை எல்லாம் இலையாகிவிடுகிறது என்று மரத்தை வெட்டச் சொல்லி அடுத்த வீட்டிலிருந்து ஒரே டார்ச்சர். 

ஒரு கட்டத்தில், டார்ச்சர் தாங்க முடியாமல் கவிராயர் அருவாளை எடுத்துக்கொண்டு மரத்தை வெட்டப் போய்விட்டார். அந்த நேரம் பார்த்து மின்வாரிய அதிகாரிகள் ஏதோ மின் பிரச்சினை என்று வந்துவிடுகிறார்கள்.

மின்சாரம் நம் உயிர் இல்லையா, இவரும் அருவாளைப் போட்டுவிட்டு அவர்களிடம் போய்விடுகிறார். 

மறுநாள் மரத்தை வெட்ட வந்தால் மரம் பட்டுப்போய்க் கிடக்கிறது. உயிரே இல்லை. இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இவரின் மனைவி சொன்னாராம், "அந்த மரத்தைக் குழந்தை மாதிரி பராமரித்தோம். அதை வெட்ட அருவாளை ஓங்கினீர்கள். அதற்குப் பொறுக்குமா? செத்துவிட்டது" என்று.#

சாரு செத்துவிட்டதாகச் சொல்லும் தாவரம், சின்னஞ்சிறு செடியல்ல; பெரிதாக வளர்ந்துவிட்ட மரம். மரமோ செடியோ வெட்டும் நோக்கத்துடன் அருவாளை ஓங்கியதால் அது செத்துவிட்டது என்பது(அதுவும் ஒரே நாளில்) 100% நம்பும்படியாக இல்லை.

என் ஆயுளில், கிராமத்தில் வசித்தபோது எத்தனையோ செடிகளையும் மரக்கிளைகளையும் வெட்டியிருக்கிறேன். அவற்றில் எந்தவொன்றும் சாரு சொல்வதுபோல் பட்டுப்போனதே இல்லை(வேறோடு பிடுங்கினால்தானே சாகும்?).  உங்களின் அனுபவமும் இவ்வாறானதாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இப்படியொரு அனுபவம் உண்மையில் தஞ்சாவூர்க் கவிராயருக்கு ஏற்பட்டிருந்தால் அதற்கான ஆதாரத்தைச் சாரு தந்திருக்கலாம். செய்யவில்லை.

'நீங்கள் யாரும் நம்ப மாட்டீர்கள். எனக்கு நூறு முறை இப்படி நடந்திருக்கிறது' என்று வேறு அடித்துவிடுகிறார். ஆயிரக்கணக்கான வாசகரால் மதிக்கப்படுகிற எழுத்தாளர் சாருவால் எப்படி இப்படியெல்லாம் மனமறியப் பொய் சொல்ல முடிகிறது?

'நம்முடைய ஆதி மருத்துவமான ஆயுர்வேதத்தில் எந்த மூலிகையை எடுக்க நினைத்தாலும், அதற்கான சில மந்திரங்களைச் சொல்லி அனுமதி பெற்றுக்கொண்டுதான் அதைப் பறிக்க வேண்டும்' என்றும் தன் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.

மந்திரங்கள் சொல்வது இருக்கட்டும், மூலிகை நமக்கு அனுமதி தந்துவிட்டது என்பதை அறிவது எப்படி?

எப்படி? எப்படி சாரு அவர்களே?!

சாருவுக்கு நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அது.....

உங்களுக்கு வெகு சுவையாகப் பொய் சொல்லத் தெரிகிறது. ஆனால், அதில் கொஞ்சமே கொஞ்சமேனும் நம்பகத்தன்மை இருத்தல் வேண்டும் என்பதை அன்புகொண்டு நினைவில் கொள்ளுங்கள்!

உங்கள் படைப்புகளை மிகப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாசிக்கிறார்கள். அவரகளிடையே இவ்வாறான மூடநம்பிக்கைகளைப் பரப்பவது உங்களின் தகுதிக்கு ஏற்றதல்ல என்பதை உணருங்கள்.

நன்றி சாரு அவர்களே.

===============================================================

கைபேசி(செல்போன்)யில் வெளியிடப்பட்டது இப்பதிவு.


https://www.kumudam.com/magazines/open_magazine/535 ஜனவரி -13, 2021