அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

அம்மாடியோவ் திருவேங்கடவனும் ஐயோ பாவம் ஐயப்பனும்!!!

கீழ்க்காண்பவை, சில நாட்களுக்குள் வெளியான ஊடகச் செய்திகள்:

#திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் 29 கோடி ரூபாய் பக்தகளின் உண்டியல் காணிக்கை மூலம் வருமானமாகக் கிடைத்துள்ளதாகக் கோவில் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை ஒட்டிக் கடந்த மாதம் 25ஆம் தேதி இங்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு, முதல் முறையாக 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 10 நாட்களில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 596 பக்தர்கள் சுவாமியைத் தரிசனம் செய்திருப்பதாகவும், 29.0 கோடி ரூபாயைக் காணிக்கையாக அவர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது# -இது திருப்பதி வேங்கடவன் எனப்படும் ஏழுமலையான் பற்றிய தகவல்.

கீழ்வருவது, சபரிமலை ஐயப்பன் பற்றியது:

#ஐயப்பன் கோவிலில் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா குறைந்த பின் மாதாந்தர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்கத் தந்திரியுடன் ஆலோசிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், மார்ச் முதல் சபரிமலை வருமானம் நின்றுவிட்டதால், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.#

ஏழுமலையான், ஐயப்பன் என்னும் இந்த இரண்டு சாமிகளுமே சக்தி வாய்ந்தவைதான் என்கிறார்கள். காணிக்கை பெறுவதில் ஏனிந்த ஏற்றத்தாழ்வு? இது விசயத்தில் மனிதர்களுக்கும் கடவுள்களுக்கும் என்ன வேறுபாடு?

திருவேங்கடவன் கணக்கில் கோடி கோடி கோடியாய்ப் பணம். எப்படிச் செலவு செய்வதென்றே தெரியவில்லை போலிருக்கிறதுஏற்கனவே தங்கத்தகடு பதிக்கப்பட்ட ஏழுமலையான் கோயில் நுழைவு வாயில், கொடிமரம், பலிபீடம் எல்லாம் பொலிவிழந்து காணப்படுகிறதாம். அதனால, அதுகளுக்கெல்லாம் புதிதாகத் தங்கத் தகடுகள் பதிக்கும் பணி தொடங்கப்போகிறதாம்.

இதற்காக, 3 கோடியே 13 லட்சம் ரூபாயில் 625 கிலோ தங்கம் பயன்படுத்தப்படும்; 8 கிலோ செம்புடன் சேர்த்துத் தயார் செய்யப்படும் இந்தப் பணிகள் 2 மாதத்தில் முடிக்கப்படும் என்கிறார்கள்.

ஐயப்பன் கோயிலிலோ பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவே காசில்லை.

கடவுள், தான் படைத்த மனிதர்களுக்குள்ளே, ஆண்டான் அடிமை, ஏழை பணக்காரன் என்று பாரபட்சம் காட்டியது ஏன் என்று கேட்டால், அதற்குக் கடவுள் காரணமல்ல; அது அவரவர் செய்த பாவபுண்ணியங்களின் விளைவு என்கிறார்கள்.

கடவுள்களுக்கிடையேயான இம்மாதிரி ஏற்றத்தாழ்வுகளுக்கு எது காரணம்?

கொரோனா காலத்திலும் கோயில் கோயிலாய் அலைகிற பக்தர்களைக் கேட்டால் பதில் ஏதும் கிடைக்காது. ஏனென்றால், கும்பிடத் தெரிந்த அளவுக்கு அவர்களுக்குச் சிந்திக்கத் தெரியாது.

இனியேனும் சிந்திப்பார்களா?!

===============================================================