சனி, 16 ஜனவரி, 2021

கடவுளைக் கலாய்க்கும் எழுத்தாளர் கல்கி!!!

கடவுளைப் பற்றிய பிரச்னைகளில் மிகவும் முக்கியமானது. கடவுள் உண்டா. இல்லையா என்பதுதான். மனிதன் தோன்றின காலத்திலிருந்து இந்தப் பிரச்னையும் இருந்துவருகிறது. ஒரு சாரார் கடவுள் இல்லை என்கிறார்கள். மற்றொரு சாரார் உண்டு என்கிறார்கள். 

ஆனால் இருசாராரும் கடவுள் இல்லாதது போலவே காரியம் செய்கிறார்கள்.

கடவுள் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி அவர் மனிதனுடைய காரியங்களில் தலையிடுவதாகத் தெரியவில்லை. அப்படித் தலையிட்டாலும் தம் இஷ்டப்படி தலையிடுறாரேயன்றி, மனிதனுடைய வேண்டுகோளை முன்னிட்டுத் தலையிடுவதாகக் காணப்படவில்லை. 

சுவாமிக்கு வேண்டுதல் செய்துகொள்வதில் எவ்வாளவோ, விநோதங்கள் இருக்கின்றன. "திருப்பதி வேங்கடாசலபதி என் பிள்ளைக்கு நூறு ரூபாய் சம்பளத்தில் உத்தியோகம் ஆகட்டும், உன் உண்டியலில் ஒரு ரூபாய் போடுகிறேன்" என்று தாயார் வேண்டிக்கொள்கிறாள். இங்கே கடவுள் உத்தியோகத் தரகர் ஆகிறார். ஒரு சதவிகிதம் அவருக்குக் கமிஷன். உத்தியோகஸ்தர் ஒருவர் தமக்கு வரும் மேல் வரும்படிக்கெல்லாம் ரூபாய்க்குக் காலணா வீதம் உண்டியலில் சேர்ப்பிக்கிறார். இதன் மூலம் லஞ்சம் வாங்குகிற பாவத்தை முழுவதுமாகப் பகவான் மேலேயே போட்டு விடுவதாக அவர் எண்ணம்.

இதனாலெல்லாம் கடவுள் வேண்டாம் என்று நான் சொல்வதாகத் தயவு செய்து நினையாதீர்கள். அதற்கு மாறாக, கடவுள் நம்பிக்கையுள்ளவர் ஆயுள் இன்ஷியூரென்ஸ் செய்ய வேண்டியதில்லை. இது எவ்வளவு பெரிய சௌகரியம் பாருங்கள். எத்தனையோ இன்ஷியூரென்ஸ் ஏஜெண்டுகளுக்கு நான் டிமிக்கி கொடுத்து வந்திருப்பதெல்லாம் கடவுளிடம் எனக்குள்ள நம்பிக்கையினால் தான். கடவுளின் மற்றொரு பெரிய உபயோகம் என்னவென்றால் அவருடைய பெயரால் பொய்யையும் மெய்யாக்கி விடலாமென்பதே. முக்கியமாக, கோர்ட்டுகளில் பொய் சாட்சி சொல்வோருக்குப் பகவானுடைய திருநாமம் இன்றியமையாத சாதனமாக இருக்கிறது. உண்மையில் கடவுள் பேரலான்றித் தற்காலக் கோர்ட்டுகளில் பொய்யே சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அது சாக்ஷியாக ஒப்புக்கொள்ளப்படமாட்டாது.

===============================================================

நன்றி: கல்கி இதழ்