'ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் கொள்கை அவனுக்குப் பிடித்திருந்தது. ‘ஒருத்தி’யுடன் மட்டும் அவன் ‘உறவு’ வைத்திருந்தான். ஆனால், அவள்...?!
கதை: அவளோடு மட்டும்.....
“உடம்புக்கு என்னம்மா?” என்றான் மணிமொழியன்.
“ரெகுலர் செக்கப் போயிடுறேன்; வழக்கமான உடற்பயிற்சி. உடம்புக்கு ஒன்னும் இல்ல. மாடிப்படியில் தடுக்கி விழுந்ததில் இடுப்பில் அடி. பத்து நாள் போல ஓய்வில் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டார். ஆசையோட என்னைத் தேடி வந்த உங்களைத் திருப்பி அனுப்புறேன். சாரி சார்” -ரொம்பவே வருத்தப்பட்டாள் மாலா.
“ரெண்டு வாரம் கழிச்சி வர்றேன். உடம்பைப் பார்த்துக்கோ.” -நகர முற்பட்டான் மணிமொழியன்.
“சார் இருங்க. என் ஃபிரண்டு சாலினியை வரச்சொல்லி ஃபோன் பண்றேன். என்னைவிட ஆள் நல்லா இருப்பா” என்றாள் மாலா.
“வேண்டாம்.”
“ஏங்க?”
“மாலா, எனக்கு எப்பவும் ‘அது’ உன்னோட மட்டும்தான்.”
அழகிய புருவங்கள் வளைந்து நெளிய, “அப்படியா?” என்றாள் அவநம்பிக்கை நிறைந்த தொனியில்.
“அது விஷயத்தில் கட்டுப்பாடில்லாமல் விளையாடினதில், என் அப்பா எயிட்ஸ் நோயாளி ஆனார்; அம்மாவுக்கும் தானம் பண்ணினார். அந்த நோய்க்கு ரெண்டு பேருமே பலியானாங்க.....”
“அடடா... அப்புறம்.....?”
“எப்பவும் மனைவியோடு மட்டும்தான் உடலுறவு கொள்வேன்னு சபதம் எடுத்தேன். ஆனா, என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ‘அந்த’ நோய்க்கு ஆளானதால, யாருமே எனக்குப் பெண் தர முன் வரல. பிரமச்சாரியாவே காலம் கடத்திட நினைச்சேன். அது சாத்தியமில்லேன்னு புரிஞ்ச போது, ஒரு புரோக்கர் மூலமா விலைமகளான உன்னைச் சந்திச்சேன்; நிரந்தர வாடிக்கையாளராகவும் ஆனேன்.....”
இடைவெளி கொடுத்துச் சொன்னான் மணிமொழியன், “இப்பவும் நான் ஏக பத்தினி விரதன்தான் மாலா. உன்னைத் தவிர வேறொருத்தியை நான் மனசாலும் நினைக்கிறதில்ல.”
கண்கள் கலங்க அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மாலா.
”நானும் இனி உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருப்பேன்” என்றாள் திடமான குரலில்.
முகத்தில் பரவசம் பொங்கி வழிய, அவள் கன்னங்களில் மிருதுவாய்ச் சில முத்தங்கள் பதித்து, “நன்றி” என்றான் மணிமொழியன்.
===============================================================