'கடவுள்களின் சிலைகள் திருடிக் கடத்தப்படுவது குறித்து, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 26) ஒரு பக்க அளவில் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.'
இந்தச் சிலைகளைத் திருடுவது யார்? நாத்திகர்களா? பெரியார் இயக்கத்தினரா? அல்ல. மாறாக ‘இந்து’வாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் கூட்டம்தான், இந்தத் திருட்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறது. 12ஆம் நூற்றாண்டுக் காலத்தின் ‘கடவுள்களுக்குத்தான்’ வெளிநாட்டுச் சந்தையில் அதிகக் கிராக்கி. எல்லா மாவட்டத்திலும் கடவுள்களைக் கடத்தும் கும்பல்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன. இதில் மிகப் பெரிய சந்தை காரைக்குடிதான். இதற்கு அடுத்ததாகச் சென்னை, மதுரை, புதுவையிலும் கடவுள் வியாபாரம் நடக்கிறது.
2008ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் 18 கடவுள்களும், 2007ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் 3 கடவுளர்களும், திருவாரூர் மாவட்டத்தில் 7 கடவுளர்களும், தஞ்சை மாவட்டத்தில் 3 கடவுளர்களும் திருட்டுப் போய்விட்டனர்.
முதலில் திருடப்பட்ட கடவுளர்கள் மும்பை அல்லது டெல்லி நகருக்குக் கடத்தப்படுகிறார்கள். அங்குச் சில காலம் வைக்கப்பட்டு, பாங்காக் நகருக்குக் கொண்டு போகப்படுகிறார்கள். பாங்காக்கிலிருந்து கப்பலில் ஏற்றி அய்ரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கு பெரும் வசதி படைத்தவர்கள் வீட்டில் அலங்காரப் பொருள்களாகத் தமிழகப் பக்தர்களின் வழிபாட்டுக்குரிய கடவுள்கள் மாறிப் போய்விடுகின்றனர். திருடர்கள் திருடும்போதும், கடத்தும்போதும் சமஸ்கிருத மந்திரத்தால் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்டு, ‘உயிரூட்டப்பட்ட’ கடவுள்கள், சக்தியற்றவைகளாகி, விற்பனைப் பண்டங்களாகவே ஆகிவிடுகிறார்கள்.
முதலில் கோயிலில் ‘பகவான்’களைத் திருடும் திருடர்கள் அந்தக் கடவுள்களை இடைத்தரகர்களிடம் ஒப்படைக்கிறார்கள். இடைத்தரகர்கள் காரைக்குடியில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இடைத்தரகர் இந்தச் சிலையைப் படம் பிடித்து, அதன் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி, தனக்கு அடுத்த நிலையில் உள்ள தரகருக்கு அனுப்புகிறார். அவர் பகவானுக்கான விலையை மதிப்பீடு செய்து நிர்ணயிக்கிறார்.
மூன்றவாது நிலையில் உள்ள தரகர் பணம் கொடுத்து வாங்கி, பம்பாய் அல்லது டெல்லிக்குக் கடத்துகிறார். திருடனிடமிருந்து முதலில் 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரத்துக்குக் கைமாறும் கடவுள் முதல் தரகரிடம் ரூ.1 லட்சமாக விலை உயர்ந்து, இரண்டாவது தரகரிடம் 10 அல்லது 15 லட்சமாகி, மூன்றாவது தரகர் வழியாக 50 லட்சம், ஒரு கோடிக்கு வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிறார். சிலை செய்யப்பட்ட காலம், எடை, அளவு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
12ஆம் நூற்றாண்டு கடவுள்களுக்குத்தான் சர்வதேசச் சந்தையில் விலை அதிகம் என்பதால் திருடர்கள் தஞ்சை, திருவாரூர், மதுரை, காஞ்சிபுரம் பகுதிகளிலேயே அதிகம் குறிவைக்கிறார்கள்.
100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ‘கடவுளர்களுக்கு’ச் சரக்கு லாரிகளில் ஏற்ற வேண்டுமானால், மாநில அரசின் அனுமதி தேவை. ஆனாலும் சரக்குகளை ஏற்றிச் செல்வோர் இது பற்றிக் கவலைப்படுவதில்லை. அரசு அனுமதியின்றியே குறுக்கு வழிகளில் கடத்தல் நடக்கிறது.
இந்தத் தகவல்களையெல்லாம் தமிழகக் காவல் துறையில் சிலைத் திருட்டுக் கண்டுபிடிப்புக்காக உள்ள தனிப் பிரிவு அதிகாரிகளிடமிருந்து பெற்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு வெளியிட்டுள்ளது.
இந்தப் பிரிவில் 25 காவல் துறை அதிகாரிகள் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு முழுதும் 33000 கோயில்கள் உள்ளன. இந்தக் கடவுள் திருட்டுகள் பற்றித் தகவல் தெரிவிப்பதற்காகக் காவல்துறை, சில நபர்களை வைத்திருக்கிறது. பொதுவாகப் பணக்கார மார்வாடிகள் போல் காவல்துறையினர் வேடம் போட்டு, தரகர்களிடம் பேரம் பேசி, பணம் தரும்போது, குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள்.
===============================================================
உதவி: http://www.keetru.com/