புதன், 20 ஜனவரி, 2021

கொதிக்கும் எண்ணையில் குளிப்பார்களா ஐயப்ப பக்தர்கள்?!?!

கொதிக்கும் எண்ணையில் கைகளால் பலகாரம் சுட்டு மெய்சிலிர்க்க வைத்தார்களாம் கர்னாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தின் குடிகிரி கிராம ஐயப்ப பக்தர்கள். 

இதை ஓர் அதிசய நிகழ்வாகக் கருதி, செய்தி வெளியிட்டு, அகமகிழ்ந்திருக்கிறது தமிழ் நாளிதழ் ஒன்று. https://www.maalaimalar.com/news/topnews/2021/01/15170954/2256388/

வழக்கம்போல இந்த ஆண்டும், பொங்கல் தினத்தன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழா நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் காட்சிதரும் மகரஜோதியைத் தரிசனம் செய்வதற்காக மேற்குறிப்பிட்ட குடிகிரி பக்தர்களும் சென்றிருந்தார்கள். சிறப்பு பூஜை செய்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தீ மிதித்ததோடு, கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலகாரம் சுட்டு அதிசயம் நிகழ்த்தினார்கள் என்கிறது நாளிதழ்ச் செய்தி. 

கொதிக்கும் எண்ணையில் வெறும் கையை விட்டுப் பலகாரம் சுடுவதைத் தமிழ்நாட்டில் உள்ள பூசாரிகளும் பூசாரிணிகளும் அவ்வப்போது செய்து காட்டியிருக்கிறார்கள். 

இவர்களும் சரி, ஐயப்ப பக்தர்களும் சரி,  சோப்புப் போட்டுக் கைகளை நன்கு கழுவிய பிறகு, கொதிக்கும் எண்ணைக்குள் கையை விட்டுப் பலகாரம் சுடச் சொன்னாலோ, ஒரு கொப்பறையில் எண்ணையைக் கொதிக்க வைத்து உள்ளே இறங்கிக் குளியல் போடச் சொன்னாலோ  அலறியடித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

இதற்கென்று ஒரு பச்சிலை உள்ளது. அதன் சாற்றை முழங்கைவரை பூசிக்கொண்டு நன்கு காய்ந்த பிறகு[பச்சிலை பூசியிருக்கும் ரகசியம் யாருக்கும் தெரியாது] பலகாரம் சுட ஆரம்பிக்கலாம். சில நிமிடங்கள்வரை கொதிக்கும் எண்ணைக்குள் கை இருந்தாலும் சுடாது. 
என் படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஒரு நாட்டு வைத்தியர் என்னிடம் இதைச் செய்து காட்டியிருக்கிறார். இது குறித்து ஏற்கனவே ஒரு பதிவும் எழுதியிருக்கிறேன். தலைப்பு மறந்துவிட்டதால் தேடி எடுக்க இயலவில்லை.

தங்களின் வருகைக்கு நன்றி.
===============================================================