செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி
அக் 2021- அனு, கீர்த்திவாசன்
நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்
ஜூன் 2022- தனுஷ்
ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி
ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ
செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி
மார்ச் 2023- சந்துரு
ஏப்ரல் 2023- நிஷா
ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்
டிசம்பர் 2023- ஆகாஷ்
அக்டோபர் 2024- புனிதா
மார்ச் 2025-இந்து, தர்ஷினி
மேற்கண்டது, ‘நீட்’ தேர்வுத் திணிப்பால் தமிழ்நாட்டில் நிகழ்ந்த தற்கொலைகளுக்கான பட்டியல்[19 பேர் +பெரும் எண்ணிக்கையிலான மனநிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள்].
மாநிலங்களுக்கான உரிமையை[தேர்வு நடத்துதல்] அவற்றிடமிருந்து பறித்த மோடி மனம் திருந்தினால் மட்டுமே ’நீட்’ நீக்கப்படுவது சாத்தியமாகும்.
சர்வ அதிகாரம் படைத்த அவர் திருந்துவது 100% சாத்தியம் இல்லை. மாநிலங்களுக்கான இன்னும் பல உரிமைகளைப் படிப்படியாகப் பறிக்கப்போகிறார் என்பதும் உறுதி. ஒரு காலக்கட்டத்தில், இந்தி மட்டுமே இந்தியாவின் வழக்கு மொழியாவதும், ‘இந்தி’யர்கள் மட்டுமே[மற்ற இனங்கள் அழியும்] வாழும் நாடாக இது ஆவதும் நிகழும்.
எனவே, தமிழின உணர்வுள்ள பல கட்சிகளும்[பாஜக நீங்கலாக] தங்களின் சுயநலத்தைப் புறந்தள்ளி, ஒருங்கிணைந்து ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடுவதுதான் உரிமைப் பறிப்பையும் இன அழிவையும் தடுப்பதற்கான ஒரே வழி.
உண்மையிலேயே, மு.க.ஸ்டாலின் அணியினரும், எடப்பாடிப் பழனிசாமி அணியினரும், இனப்பற்றில் பத்தரை மாற்றுத் தங்கங்கள் என்றால், அவர்கள் இதற்கான போராட்டம் ஒன்றை உடனடியாகத் தொடங்குதல் தவிர்க்கவே கூடாதது.
இதன் விளைவாக, தி.மு.க. ஆட்சி கலைக்கப்படலாம். இந்த இரு தலைவர்களும் கூட்டணித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு, தேசத் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படலாம்.
தலைவர்கள் அடக்கி ஒடுக்கப்படும் நிலையில் இவர்களின் தொண்டர்கள், அஞ்சாமலும் தொய்வில்லாமலும் போராட்டத்தைத் தொடர்வார்களேயானால் மோடி தன் பிடிவாதத்தைக் கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்வதும்; பறித்த உரிமைகளைத் திரும்ப ஒப்படைத்தலும் நிகழக்கூடும்.
இது தமிழினத்துக்கான வெற்றியாக அமையும்.
அடுத்து, மாநிலச் சட்டமன்றத்துக்கு நடைபெறும் தேர்தலில், இப்போதுள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப[கூடக்குறைய]தாராள மனதுடன் இடங்களைப் பகிர்ந்துகொண்டால் அனைவரும் தேர்வாக வாய்ப்புள்ளது.
ஆட்சி அமைப்பதிலும் இன நலனைக் கருத்தில்கொண்டு இதே பங்கீட்டு முறையைப் பின்பற்றலாம்.
சுருங்கச் சொன்னால், அனைத்துத் தமிழர் கட்சிகளும் இணைந்து செயல்படுவது காலத்தின்[பாஜக ஆட்சி நீடிக்கும் நிலையில்] கட்டாயம்.
இணைந்து செயல்படுவார்களா[தமிழின&மொழி அழிவைத் தடுத்திட] தி.மு.க. கூட்டணியினரும் அ.தி.மு.க. அணிக்காரர்களும்?
அந்த நல்ல நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்போம்.