அதே கீறல் வழியாக காற்றும் நீரும் முட்டைகளை அடைகின்றன.
அவற்றில் அழுக்கும், சிறு சிறு கிருமிகளும் உள்ளன.
முட்டை(கள்), தேரையாக/தேரைகளாக உருப்பெறும் நிலையில், காற்றிலும் நீரிலும் உள்ள கிருமிகளும் அழுக்கும் உணவாகி அவற்றின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ஈரப்பதம் வாய்க்காதபோது, பல நாட்கள் காய்ந்த கருவாடு போல் கிடந்து அது/அவை உயிர் வாழுமாம்.
இதுதான், கல்லுக்குள் தேரை உயிர் வாழும் அதிசயம்.
மாங்கொட்டைக்குள் வண்டு மறைந்திருப்பதும் இது போன்றதொரு நிகழ்வால்தான்.
உருப்பெருக்கியில் பார்த்தால், நம் தோலில் உள்ளது போலவே, மாம்பழங்களிலும் துவாரங்கள் இருப்பதைக் காணலாம்.
வண்டின் முட்டையிலிருந்து வெளிவரும் புழுவானது பழத் துவாரங்களின் வழியாக உள்ளே நுழைகிறது. பழத்திலிருந்து தனக்குத் தேவையான உணவைப் பெறுகிறது.
அது உயிர் வாழ்வதற்குத் தேவையான காற்று, சூரிய ஒளி ஆகியவையும் துளைகள் வழியாக உள்ளே செல்கின்றன.
கல்லுக்குள் தேரையாகட்டும், பழத்துக்குள் வண்டாகட்டும் அவை அசைவற்ற நிலையிலேயே இருப்பதால் அவற்றிற்கான உணவின் தேவை மிக மிகக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேரை, பழத்துக்குள் வண்டு ஆகியவை பற்றிய இந்த விளக்கவுரையை வாசித்த பிறகும், 'தேரையும், மாம்பழத்து வண்டும் உயிர் வாழ்வது கடவுளின் கருணையால்தான் என்று எவரேனும் சாதிப்பார்களேயானால், அவர்கள் காற்றும் ஒளியும் புகாத ஒரு பெட்டிக்குள் ஒரு தவளையையோ தேரையையோ கொஞ்சம் நாட்கள் அடைத்து வைத்து, அவற்றிற்கு உணவளித்துக் காப்பாற்றுமாறு தங்களின் குலதெய்வத்தையோ, வழிபடு கடவுளையோ வேண்டிக்கொள்ளலாம்.
அவை உயிரோடு இல்லையென்றால், கடவுள்களைச் சபிக்க வேண்டாம்.
பாவம் கடவுள்கள்!
==========================================================================ஆதார நூல்: 'கடவுளும் பிரபஞ்சமும்' -மா. சிங்காரவேலு. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை.
* * *
தேரை: கூடுதல் தகவல்:
'கல்லுக்குள் தேரை' என்பது பழக்கமான சொற்றொடர் என்றாலும் கல்லிடைத் தேரை என்பதுதான் சரியான சொற்றொடர் ஆகும். தவளையைப் போன்றே தேரையும் இருவாழ்வி வகையைச் சார்ந்தது. தேரை ஒரு குளிர் ரத்தப் பிராணி ஆகும். இனப்பெருக்கக் காலமான மழைக் காலத்தில்தான் வெளிப்படும். மற்றக் காலங்களில் பூமிக்கடியில் ஈரமான சூழ்நிலையில் எல்லாவிதமான செயல்களையும் முடக்கி ஒருவித உறக்க நிலையில் இருக்கும்.
அப்போது, குறைந்தபட்சச் சுவாசம் தோல் மூலம் நடைபெறும். பொதுவாகத் தேரைகள், பூமிக்கடியில் உள்ள பொந்துகளிலும் கற்களுக்கு இடையேயும் உறக்க நிலையை மேற்கொள்ளும்.
எப்போதாகிலும் கற்களைப் புரட்டும் போதும் அல்லது கற்களை உடைக்கும் போதும் இந்த உறக்க நிலையிலுள்ள தேரைகள் வெளிப்படும். அதனால்தான் 'கல்லுக்குள் தேரை' என்ற சொற்றொடர் உருவாகி இருக்கிறது. ' கல்லிடைத் தேரை ' என்பதுதான் சரியான பயன்பாடு.
தேரை இவ்விதம் உறக்க நிலையில் இருக்கும்போது தன் தசைகளில், கல்லீரலில் சேமித்து வைத்துள்ள(க்ளைக்கோஜன்) உணவுப் பொருளை ஆற்றல் உற்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறது.