பகுத்தறிவாளன்: மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டன?
ஆத்திகன்: கடவுளால் உண்டாக்கப்பட்டன.
கேள்வி[பகுத்தறிவாளன்]:
மதங்கள் எத்தனை?
பதில்[ஆத்திகன்]:
பல மதங்கள் உள்ளன.
கேள்வி: இந்துமதம் யாரால் ஏற்படுத்தப்பட்டது?
பதில்: கடவுளால்.
கேள்வி: என்ன ஆதாரம்?
பதில்: வேதங்கள் சொல்கின்றன..
கேள்வி: வேதங்கள் தோன்றியது எப்படி?
பதில்: கடவுளால் தோற்றுவிக்கப்பட்டன.
கேள்வி: இதற்குச் சாட்சியோ ஆதாரங்களோ உண்டா?
பதில்: இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பதே பாபம்.
கேள்வி: இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களை மூடர்கள் ஆக்கிவிட்டீர்கள். போகட்டும். கிறித்துவ மதம் என்பது என்ன?
பதில்: ஏசுநாதரின் போதனைகளைச் சொல்வது.
கேள்வி: ஆதாரம்?
பதில்: பைபிள்.
கேள்வி: ஏசுநாதர் என்பவர் யார்?
பதில்: கடவுளின் குமாரர்.
கேள்வி: அப்படி என்று யார் சொன்னது?
பதில்: ஏசுவே சொல்லியிருக்கிறார்.
கேள்வி: அது அவரது வாக்குமூலம். இதை நிரூபிக்க இந்த வாக்குமூலம் போதுமா?
பதில்:ஏன் போதாது?
கேள்வி: இப்போது ஒருவன் உம்மிடம் வந்து, ‘நான்தான் கடவுள்” என்று சொன்னால் நம்புவீரா? இருக்கட்டும். முகமதிய மதம் என்றால் என்ன?
பதில்: முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகளைக் கொண்டது.
கேள்வி: அதற்கு என்ன ஆதாரம்?
பதில்: குரான்.
கேள்வி: அது யாரால் சொல்லப்பட்டது?
பதில்: கடவுளால் முகமதுநபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.
கேள்வி: அப்படி என்று சொன்னது யார்?
பதில்: நபி அவர்கள் சொன்னார்கள்.
கேள்வி: அப்படி என்று யார் சொன்னார்?
பதில்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன் வேறு பல சாட்சியங்களும் இருக்கின்றன.
கேள்வி: வேறு பல சாட்சியங்கள் என்பவை எவை?
பதில்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்களின் வாக்கு.
கேள்வி: அவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?
பதில்: எல்லாம் நம்பிக்கைதான்.
[உரையாடல் தொடர்கிறது..........]
==========================================================================ஆதார நூல்: ‘புத்தரும் தந்தை பெரியாரும்’, கண்மணி பப்ளிகேஷன்ஸ், 4, இந்துக் காலனி, முதல் மெயின் தெரு, உள்ளகரம், சென்னை - 600 091; முதல் பதிப்பு: செப்டம்பர் 2000.
நூலாசிரியர்; தந்தை பெரியார்.
*** ‘குடியரசு’[20.03.1938] இதழில், கடவுள் குறித்தும் மதங்கள் பற்றியும் பெரியார் எழுப்பிய கேள்விகளில்[உரையாடல் மூலம்] சிலவற்றின் தொகுப்பு இப்பதிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக