திங்கள், 20 டிசம்பர், 2021

காய்கறி அங்காடியும் கடவுள் குடியிருப்பும் வேறு வேறல்ல!!!

பேருந்துப் பயணத்தின்போது முகக் கவசம் அணிவது அவசியத் தேவை; தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடன் பயணிக்கிற மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்றும் என்பது அதற்கான காரணம்.

காய்கறி வாங்கச் சென்றால் மேற்கண்டவற்றை முறையே அணிந்திருப்பதும், குத்திக்கொண்டிருப்பதும்  கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றைப் புறக்கணித்துப் பொது இடங்களில் நடமாடினால் காவல்துறை தண்டம் விதிக்கும்.  

மருத்துவமனைகளிலும்கூட, மனிதர்களைக் கொரோனா குறிவைத்துத் தாக்குதல் நடத்தும் என்பதால். தடுப்பூசிகள் போடாமலும்,  முகக் கவசம் பொருத்திக்கொள்ளாமலும் அங்குச் செல்வது ஆபத்தானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில்களும்கூட இந்த நடைமுறைகளுக்கு விதிவிலக்கானவை அல்ல.

இதன் மூலம் நாம் ஐயம்திரிபறப் புரிந்துகொள்வது.....

அங்கிங்கெனாதபடி மண்ணுலகில் எங்கும் விரவியிருக்கும் கொரோனாவுக்குக் கடவுள்கள் குடிகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் கோயில்களும் ஒரு பொருட்டல்ல என்பதே.

அவற்றைப் பொருத்தவரை, காய்கறி அங்காடிகளும், கடவுள் குடிகொண்டிருக்கும் கோயில்களும் ஒன்றுதான். 

இது மறுக்க இயலாததொரு உண்மையாக இருக்க, பக்தகோடிகள்  அணி அணியாகவும்  அலையலையாகவும் கோயில்களுக்குப் படையெடுக்கிறார்களே, ஏன்?

இருந்த இடத்தில் இருந்துகொண்டே வழிபட்டால், இவர்களின் கடவுள் கண் திறக்க மாட்டாரா? கருணை மழை பொழிந்திட மறந்து இருந்திடுவாரா?

கொரோனா என்னும் இந்தத் தொற்று நோய் முற்றிலுமாய் அழிந்து ஒழிந்திடும்வரை  கோயிலுக்குப் போவதைத் தவிர்த்தால் குடிமுழுகிப்போகுமா? 

இவர்கள்.....

'வாழ்வாங்கு வாழ்வதற்குப் பக்தி ஒன்றே போதும்; பகுத்தறிவெல்லாம் தேவையில்லை என்று நம்புகிறார்களா? 

"ஆம்" என்று சொல்லி இவர்களுக்காகப் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை!

==========================================================================