திருமணங்களில் தாலி கட்டும் சடங்கு வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நிகழ்வது[அரிதாக 60 வயதில் கட்டுவதும் வழக்கத்தில் உள்ளது].
முழுமுதல் கடவுள் சுந்தரேசனார்- மீனாட்சியம்மை திருமணமும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களுக்கான மணவிழா[புராணக் கதை என்றாலும்] எப்போது நிகழ்ந்தது என்பது நம்மில் எவருக்கும் தெரியாது[மோடி, ஜக்கி வாசுதேவன் போன்ற சாகா வரம் பெற்ற கடவுளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருக்கக்கூடும்] எனினும், ஆண்டுதோறும் அவர்களுக்கு மணம் செய்விப்பதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை[எப்படியெல்லாம் மூடநம்பிக்கையை ‘அவர்கள்’ வளர்த்திருக்கிறார்கள்!!!].
பக்தக்கோடிகளை இது மகிழ்விக்கிறது என்றாலும், அர்ச்சகர் ஒருவர் அம்மையின் கழுத்தில் தாலி அணிவிப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
நான் கடவுளை முழுமையாக நம்புகிறவன் அல்ல என்றாலும், இந்த நிகழ்வைத் தொலைக் காட்சிகளில் காணுந்தோறும் பெருமளவில் கோபப்பட்டதுண்டு.
மனிதகுல மணமகளுக்கு அவளின் கணவன் தாலி கட்டாமல் ஒரு புரோகிதர் கட்டுவது அயோக்கியத்தனம்[கொங்கு நாட்டிலும் முன்பு இப்படியொரு அசிங்கம் வழக்கத்தில் இருந்தது. சடங்கு செய்யும் அருமைக்காரர் இதைச் செய்வார்] என்னும்போது, அனைத்து உயிர்களுக்கும் அருள்பாலிக்கிற அம்மன் கழுத்தில் அர்ச்சகர் தாலி அணிவிப்பது மன்னிக்கவே கூடாத குற்றம் ஆகும்.
இந்தக் குற்றச் செயலை மிகப் புனிதமானதாகக் கருதி ஆண்களும் பெண்களும் கை கூப்பித் தொழுவது காணச் சகிக்காதது.
ஆண்டுதோறும் தாலி கட்டுவது அவசியத் தேவை என்றால்.....
அர்ச்சகர் வீட்டுப் பெண்களில் ஒருவரைக்கொண்டு இதைச் செய்திருக்கலாம்[மணவிழாவில் கலந்துகொள்ளும் பெண்களும் செய்யலாம்]. செய்யும் நேர்மைக் குணம் எவருக்குமே இல்லாமல்போனது ஆச்சரியம்.
அறிவியல் வெகு வேகமாக வளர்ந்துவரும் நிலையில், சொக்கநாதரின்[சுந்தரேசனார்] இரு கைகளையும் இயக்கும் வகையில் மாற்றியமைத்தால், சிலையை மீனாட்சியம்மைக்கு முன்னால் இருத்தி, அப்பனின் கைகளால் அம்மையின் கழுத்தில் தாலி அணிவிக்கச் செய்யலாம்.
கோயில் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை இனியேனும் செய்வார்களா?
* * * * *
முக்கியக் குறிப்பு:
இது நக்கல் பதிவல்ல; மனப்பூர்வமான பரிந்துரைத்தலை நோக்கமாககொண்டது.