ஞாயிறு, 8 டிசம்பர், 2024

கடவுள்[கள்] ‘இருக்கிறார்[கள்]’ என்பது நிரூபிக்கப்பட்டால்.....

இந்நாள்வரை கடவுள் என்றொருவர் ‘இருக்கிறார்’ என்பது நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அவரை முழுமையாகவோ அரைகுறையாகவோ நம்புவோர் அதிக அளவில் உள்ளனர்.

அவரிடம் கோரிக்கை வைப்போர் ஏராளம். கோயிலுக்குச் சென்று மொட்டை போடுவோர், கணக்குவழக்கில்லாமல் கற்றை கற்றையாக உண்டியலில் பணம் போடுவோர் என்றிவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

“மனிதாபிமானம் முதலில்; கடவுளைப் போற்றுவது அப்புறம்” என்று கடவுள் மறுப்பாளர்கள் கெஞ்சிக் கூத்தாடியும்கூட, பக்தக்கோடிகள் கடவுளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில்.....

‘கடவுள் இருக்கிறார்’ என்பதை உரிய ஆதாரங்களுடன் அறிவியலாளர்கள் நிரூபிப்பார்களேயானால் இந்நிலை[கடவுள் நம்பிக்கையாளர் அதிகரிப்பு] மாறுமா என்றொரு கேள்வி எழுந்தபோது, அடியேன் நாட்கணக்கில் ‘ஊண் உறக்கம்’ இல்லாமல்[ஹி... ஹி... ஹி!!!] சிந்தித்ததில் கிடைத்த விடை:

கருணைக் கடலான கடவுள் இருப்பது 100% உறுதி என்பதால், அவரிடம் வைக்கும் கோரிக்கை தங்குதடையின்றி நிறைவேறும் என்று நம்பி, கோயில்களுக்குச் சென்று வழிபடும் இந்துக்களின் எண்ணிக்கை மிக மிக மிகப் பல மடங்கு அதிகரிக்கும்.

நம்பிக்கையின் பேரில், தேவாலயம் சென்று, செய்த குற்றங்களுக்குப் ‘பாவ மன்னிப்பு’க் கேட்கும் கிறித்தவர்களின் எண்ணிக்கை, கடவுள் இருப்பது நிரூபிக்கப்பட்ட பிறகு எக்குத்தப்பாக எகிறும்.

இஸ்லாமியர்கள் ஐந்து தடவை என்பதற்கு மாறாக ஐம்பது அறுபது முறை தொழுகை நடத்துவார்கள்.

ஏழுமலையானைப் போன்ற கடவுள்களுக்கான கோயில்களில், பக்தர்கள் தரிசனத்துக்காக மணிக் கணக்கில் வரிசையில் காத்திருப்பது நாள்கணக்கில் என்றாகிப் பிறகு மாதக்கணக்கில் என்று மாறும். 

உண்மைக் கடவுளைக் கண்ணாரக் கண்டு தரிசிக்கும் பேறு கிட்டாமல் பலர் தற்கொலை செய்வதும் நிகழும்.

ஒரு கோயிலுக்கு ஒரு உண்டியல் போதாதாகையால், ஐம்பது, நூறு, ஆயிரம் என்று அந்த எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமானதாகும். 

திருவண்ணாமைலையில், ஆண்டுக்கொரு முறை மகாதீபம் ஏற்றுவது மாதம் ஒரு முறையோ, நாள்தோறுமோ   என்று மாறும்.

திருப்பதி, பழனி போன்ற பிரபலமான சாமி கோயில்களில் கோரிக்கை வைத்து முன்கூட்டியே மொட்டை போடும் பக்தர்கள் எண்ணிக்கை அபிரிதமாகப் பெருகும் என்பதால், அவரவர் விரும்பும் இடங்களில் தலையை மழித்து, முடியை[தலை மயிர்]க் கோயிலில் ஒப்படைத்தால் போதும் என்று விதி செய்யும் தேவை உருவாகும்.

இப்போதுள்ள கோயில்கள் போதா என்பதால் நகரங்களில் வீதிதோறும், பட்டிதொட்டிகளிலும் புதிய புதிய கோயில்கள் கட்டப்படும். பிற கடமைகளை மறந்து மக்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தைக் கோயில்களிலேயே வீணடிப்பார்கள்.

கடவுள் இருப்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதால், ஏழை எளியவர் வறியவர் என்று அத்தனை மக்களின் குறைகளையும் அவரே தீர்ப்பார் என்றெண்ணித் ‘தான தருமம்’ செய்வது அறவே இல்லாமல்போகும்.

கிராமப்புறக் கோயில்களில் கிடா வெட்டுதல் போன்ற பலியிடுதல் அதிகரிக்கும்; கிடாய்களின் விலை மிகப் பல மடங்காக எகிறும்.

சிலை வடிவில் காட்சியளிக்கும், அல்லது காட்சியளிக்காத[இஸ்லாம்] சர்வ மதக் கடவுள்கள் அவ்வப்போது சுயரூபத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்து அவர்களை மெய் சிலிர்க்க வைப்பார்கள். கடவுளைக் கண்டுவிட்ட பேரானந்தத்தில் மூழ்கி மூச்சுத் திணறி பகதர்கள் உயிர் துறக்கவும்கூடும். 

பக்தர்களின் கோரிக்கைகளைக் குறைந்த அவகாசத்தில் நிறைவேற்றி, தத்தமக்கான பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், அல்லா, கர்த்தர், இந்துக் கடவுள்கள் ஆகியோரிடையே கடுமையான போட்டி உருவாகும். இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள். 

உண்மையில் கடவுள் என்றொருவர் இருப்பதால் மக்களுக்கான அறிவியல் தேவைகளை[கண்டுபிடித்துத் தருதல்] அவரே நிறைவு செய்வார் என்னும் நம்பிக்கையில் விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வுகள் நிகழ்த்துவதை அடியோடு நிறுத்துவார்கள்.

கடவுள் இருப்பதும் அவர் கருணை வடிவானவர் என்பதும் மெய்ப்பிக்கப்படும் நிலையில், காணிக்கைகள் செலுத்தி வழிபட்டால் கொலை, கொள்ளை, வன்புணர்வு என்று செய்யும் குற்றம் எதுவாயினும் அவர் மன்னிப்பார் என்று மக்கள் நம்புவார்களாதலால், அவர்கள் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும்.

எனவே, விஞ்ஞானிகளிடம் நாம் வைக்கும் கோரிக்கை:

“அன்புகொண்டு கடவுளின் இருப்பை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்.”